ஆளுநரை சந்தித்தது ஏன்?: தம்பித்துரை விளக்கம்!

சென்னை(18 ஜூன் 2017): பரபரப்பான சூழ்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மூன்று அணிகளாகப் பிரிந்து அ.தி.மு.க இயங்கிவருகிறது. இதனால், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், அப்போது அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு, ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணியினர் கோடிகளில் பேரம் பேசிய வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்டது.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், பேரவைக் கூட்டத்தொடரிலும், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை ஸ்டாலின் நேற்று சந்தித்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடந்தது. குறிப்பாக, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தையும், ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தற்போது ஆளுநர் மாளிகையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி., ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்தித்துள்ளார். ஸ்டாலினைத் தொடர்ந்து தம்பிதுரையும் ஆளுநரைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆளுநர் உடனான சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை எம்.பி. கூறுகையில், ‘அ.தி.மு.க ஆட்சி செய்யவே மக்கள் வாக்களித்தார்கள். தி.மு.க ஆட்சியை கவிழ்க்கத் திட்டமிட்டு வருகிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாகவே நடந்து வருகிறது. இதனால் ஆட்சி கவிழ்ப்பு என்பதற்கே இடமில்லாத சூழ்நிலைதான் நிலவி வருகிறது. ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்" என்றார்.