முதல்வர் எடப்பாடி, தினகரன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு!

Sunday, 18 June 2017 15:54 Published in தமிழகம்

சென்னை(18 ஜூன் 2017): ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ஆர்.கே.நகர் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் புகாரால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட எட்டு கேள்விகளை அவர் கேட்டிருந்தார். இதற்கு, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்று பதில் வந்துள்ளது.

வைரக்கண்ணன் கேட்ட மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.