ஸ்டாலினும் எடப்பாடியும் கூட்டணி ஆட்சி நடத்துகிறார்கள்:ஓ.பி.எஸ்!

Sunday, 16 July 2017 13:48 Published in தமிழகம்

திருவாரூர்(16 ஜூலை 2017): ஸ்டாலினும், எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணி ஆட்சி நடத்துகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் செயல் வீரர்கள் கூட்டம், திருவாரூரில் நடைபெற்றது. இதில் பன்னீர்செல்வம், பொன்னையன், முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசுகையில், "அம்மாவால் விரட்டப்பட்ட சசிகலா குடும்பத்தின் பிடியில் சிக்கி, தற்போது பினாமி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எதிராக தொடங்கப்பட்டதுதான் நம் தர்ம யுத்தம். அதில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். 122 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால், கட்சி அவர்களது என்றாகி விடாது. அனைத்துத் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு எங்களுக்குதான் உள்ளது. சீப்பை மறைத்து வைத்தால், கல்யாணம் நின்றுவிடும் என்று நினைக்கக் கூடாது கழகத்தை மீட்போம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு மக்கள் பிரச்னை குறித்து அக்கறை இல்லை. நான் எவ்வளவோ முதல்வர்களை பார்த்துள்ளேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி போல யாரையும் பார்த்ததில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், அவர் வாயே திறப்பதில்லை. VGP தீம் பார்க்கில், சிரிக்காமல், அசையாமல் நிற்பவர்களை போல ரியாக்‌ஷனே இல்லாமல் இருக்கிறார். எப்படி அவர்களை சிரிக்க வைத்தால் 1,000 ரூபாய் பரிசு தருவார்களோ... அதேபோல எடப்பாடி பழனிசாமியை சிரிக்க வைத்தால் நான் 10,000 ரூபாய் பரிசு தருகிறேன். சிரிக்கக் கூட வைக்க வேண்டாம், பேச வைத்தாலே போதும் 10,000 பரிசு தருகிறேன்" என்றார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.