டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது: இரு விவசாயிகள் மயக்கம்!

Sunday, 16 July 2017 16:33 Published in தமிழகம்

புதுடெல்லி(16 ஜூலை 2017): டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக எலிக் கறி, பாம்புக்கறி உண்ணுதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

தங்கள் கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய இந்த போராட்டம் 41 நாட்கள் நடந்தது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தை கைவிடும் படியும் இதுகுறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் ஏப்ரல் 23-ந்தேதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று தமிழகம் திரும்பினர்.

மே 25-ந்தேதிக்குள் மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. இதனால் மீண்டும் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 14-ந்தேதி காலை திருச்சி ஜங்சனில் இருந்து சுமார் 100 விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி புறப்பட்டனர். இன்று காலை டெல்லி சென்றடைந்த அவர்கள் பிரதமர் இல்லம் அருகே சாலையில் திடீரென அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

முன்னதாக அவர்கள் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து போராட்டம் நடந்த பிரதமர் அலுவலக சாலை வரை கோவணத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

கோவணம் அணிந்து வாயில் எலும்பு துண்டுகளை கவ்வியப்படி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு இரண்டு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்

இதற்கிடையே காலையில் இருந்து உணவு எதுவும் சாப்பிடாததால் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான பொள்ளாச்சியை சேர்ந்த பால சுப்பிரமணியன், ஈரோட்டை சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த வித முதலுதவி சிகிச்சையும் அளிக்க டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Around 50 farmers from Tamil Nadu today staged protest in New Delhi holding a march from Nizamuddin railway station to Prime Minister Narendra Modi's residence on the Lok Kalyan Marg. The protesters held demonstration outside Prime Minister Narendra Modi's residence raising their demands.

 

Last modified on Sunday, 16 July 2017 16:47
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.