டி.டி.வி தினகரனுக்கு எதிராக எடப்பாடி அணி பரபரப்பு தீர்மானம்!

சென்னை(10 ஆகஸ்ட் 2017): டி.டி.வி. தினகரனுக்கு எதிராகவும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பு எதுவும் செல்லாது என்றும் முதல்வர் எடப்பாடி அணியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார். கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என ஈபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றியது.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய சூழலில் உள்ளோம். தினகரனை கட்சியில் சேர்த்தது சட்ட விரோதம். இவரது நியமனம் செல்லாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற முறையில் கட்சியை பலப்படுத்த வேண்டும். அசாதாரண சூழ்நிலையால் சசிகலாவால் செயல்பட முடியவில்லை. ஜெயலலிதா இருந்த இடத்தில், பொதுச்செயலாளராக வேறு யாரையும் அமர்த்திப் பார்க்க தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள்.இந்த சூழலில் நாம் அனைவரும் கட்சியை வழி நடத்தி வருகிறோம். இந்நிலையில் நிர்வாகிகளை தினகரன் நியமித்தது, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அந்த பொறுப்பை யாரும் ஏற்க வேண்டாம்.

தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. அவர் அறிவித்துள்ள பதவிகள் செல்லாது. அதனை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். துணை பொது செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம். ஜெயலலிதாவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்சியை வழிநடத்துவர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.