எடப்பாடியின் நடவடிக்கை சட்டப்படி செல்லாது: தினகரன் அதிரடி!

தஞ்சை(10 ஆகஸ்ட் 2017): எடப்பாடி அணியினர் என் மீது எடுத்துள்ள நடவடிக்கை சட்டப்படி செல்லாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி எப்போது தேர்தல் ஆணையத்தின் தலைவரானார்? ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியதால் அவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. இதுகூட தெரியாமல் விதிகளை மீறி அதிமுகவின் லெட்டர் பேடுகளில் தீர்மானம் கொடுத்துள்ளனர்.

இந்த விதிமீறலை தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால் இன்று தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள முதல்வர் உள்பட அனைவரின் பதவிகளும் பறிபோகும். துணை பொதுச் செயலாளராக நான் செயல்பட எந்த தடையும் இல்லை.

நியமனப் பதவிகளை யாரை வேண்டுமானாலும் பொதுச்செயலர் நியமிக்கலாம். இன்று வரை சசிகலாவால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்தான் கட்சியின் கருவூலத்தை கையாண்டு வருகிறார். பணம் எடுப்பதற்கான காசோலைகளில் கையெழுத்திடுகிறார்.

திண்டுக்கல் சீனிவாசனின் நியமனம் செல்லும் என்றால், எனது நியமனமும் செல்லும். அவரது நியமனத்தை ஏற்கும்போது எனது நியமனத்தை ஏன் மறுக்கிறார்கள். மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் சேர்ந்த போதே பதவியை அளித்தார் ஜெயலலிதா.

அதிமுக இப்போதும் எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. புதிய பொறுப்பாளர்களை நியமிக்க, நீக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டிருந்தால் போதும் என நினைக்கிறார் எடப்பாடி. தேர்தல் ஆணையத்தில் துணை பொதுச்செயலராக என்னை ஆதரித்து எடப்பாடி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி உட்பட யாராக இருந்தாலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்திலும் வெளியேயும் முரண்பாடாக பேசுகிறார்கள். என்னை தடை போட்டு நிறுத்தும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உண்டு என்றார் தினகரன்.

முன்னதாக தினகரனை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட விவகாரம் செல்லாது என்று எடப்பாடி தலைமையிலான நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.