94 பள்ளி குழந்தைகளை பலிகொண்ட தீ விபத்து: அனைவரும் விடுதலை!

தஞ்சை(10 ஆகஸ்ட் 2017): கும்பகோணம் தீ விபத்து தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004–ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி ஆகினர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தஞ்சை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது.

அந்த விசாரணையின் முடிவில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், இவரது மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பாலாஜி , தொடக்கக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் துரைராஜ் , தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம, தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன் , சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும், இன்ஜீனியர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மாவட்ட முன்னாள் தொடக்கக்கல்வி அலுவலர் மாதவன் உள்பட 11 பேரை விடுதலை செய்தும் தஞ்சை நீதிமன்றம் கடந்த 2014–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தண்டனை பெற்றபின் தாளாளர் சரஸ்வதி இறந்துவிட்டார். மற்ற 9 பேரும் தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன்,வேலுமணி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் முதல் குற்றவாளியான பழனிசாமி, மற்றும் ஐந்தாவது குற்றவாளியான சமையல்காரர் வசந்தி ஆகியோரின் தண்டையை மற்றும் மாற்றியமைத்து உத்தரவிட்டு மற்ற அனைவரையும் விடுதலை செய்தனர். அதன்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பழனிசாமி போதிய சிறை தண்டனை அனுபவித்து விட்டதாக கூறி அவரை விடுலை செய்து உத்தரவிட்டார். அதே போன்று 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சமையல்காரர் வசந்தியின் சிறைத் தண்டனையும் குறைத்து அவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.