மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி!

மதுரை(11 அக் 2017): மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.

விஜய தசமி பண்டிகையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு பேரணி நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனையடுத்து, அந்த அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. மதுரை புறவழிச்சாலையில் இருந்து பழங்காநத்தம் வரை பேரணி செல்ல நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. பேரணியின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பேரணியில் செல்பவர்கள் கையில் ஆயுதங்கள், கம்பு, லத்தி உள்ளிட்ட எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், முழக்கங்கள் எழுப்பக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.