மதச்சார்பின்மைக்கு விரோதமான வந்தேமாதரம் புறக்கணிக்கப்பட வேண்டும்: கி. வீரமணி!

Tuesday, 14 November 2017 11:01 Published in தமிழகம்

சென்னை(14 நவ 2017): முசுலிம்களைப் பன்றிகள் என்று சிறுமைப்படுத்தும் நாவலில் இடம் பெற்ற வந்தே மாதரம் பாடலை தமிழக அரசு புறக்கணிக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பள்ளிகளில் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், வழக்குக்கு அப்பிரச்சினை நேரடியான சம்பந்தம் உடையதல்லாததாக இருந்தபோதிலும் தீர்ப்பு வழங்கினார்.

இதன்மீது மேல் முறையீடு சென்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் இது அரசின் கொள்கை முடிவாக தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சினை; எனவே தமிழக அரசின் முடிவுக்கே இதனை விட்டு விடுகிறோம்; அரசு முடிவு எடுக்கட்டும் என்பதாகத் தீர்ப்பு வழங்கினர்.

இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். தமிழக அரசும் இதுபற்றி ஆழமாகப் பரிசீலித்தது, இருப்பதை அப்படியே பள்ளிகள் முறையாக இருக்க முடிவு எடுப்பது அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு உகந்ததாக, தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்காததாகவும் அமையும்.

இத்தலைமுறையில் பலருக்கு இந்த வந்தே மாதரம் பாடல் - வரலாறு தெரியாது.

வங்காளத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனப் புதின ஆசிரியர் எழுதிய ஆனந்தமடம் எனும் (1882இல்) புதினத்தில் ஹிந்து - முசுலீம் பிரச்சினையை மய்யப்படுத்தி எழுதியுள்ளார். அதில்தான் இந்த வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றதை பிறகு இந்துத்துவா பார்வையுடன், பின்னணியில் தேசியத்தார்களான அக்கால காங்கிரசினர் இதை ஒரு கோஷமாகவே பயன்படுத்தத் தொடங்கினர்.

ஹிந்து மதத்தவரை உயர்த்தியும், இஸ்லாமியர்களைக் கீழ்மைப்படுத்தும் வரிகள் (பன்றிகள் என்றெல்லாம் வர்ணனை அதில் உண்டு) அந்தப் புதினத்தில் வந்துள்ளன. அந்த நாவலை சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் கடுமையாக எதிர்த்தனர். மதச் சார்பற்ற கொள்கையினரும் எதிர்த்தனர்.

ராஜகோபாலாச்சாரியார் முதல் அமைச்சராக இருந்தபோது நடந்தது என்ன?

அன்றைய சென்னை ராஜதானியில் 1938இல் பதவிக்கு வந்த சி. இராஜகோபாலச்சாரியார் (இராஜாஜி) ஆட்சியில் சென்னை சட்டசபை துவங்கும் முன்பு இப்பாடலை வந்தே மாதரப் பாடலைப் பாட ஆணை பிறப்பித்தார். அதை முசுலீம் உறுப்பினர்களும், ஏனைய பொதுவானவர்களும் கடுமையாக எதிர்த்தனர்.

ஹிந்துக்களும் - முசுலிம்களும் இதர வகுப்பினர்களும் கலந்துள்ள சட்டசபையில் முசுலிம்களை அவமதிக்கக்கூடிய வந்தே மாதரப் பாடலைப் பாடச் செய்வது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகும் என்று அந்த சட்டசபையில் எதிர்த்து கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.

பிறகு முதல் அமைச்சர் ஆச்சாரியார் அம்முடிவைக் கைவிட்டு, அந்த ஆணையைத் திரும்பப் பெற்றார்!

இந்த வரலாறு தெரியாமலேயே இதற்கு தேச பக்தி முலாம் பூசி இப்போது பள்ளிகளில் பாட வேண்டும் என்றால் மதம் சார்ந்த பிள்ளைகளும் (இஸ்லாமியர் உட்பட), மதம் சாராதவர்களின் பிள்ளைகளும் படிக்கும் பள்ளிகளில், சமூக நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் இப்பாடலைப் பாடுவது தேவையேயில்லை. வீண் கலவரங்களுக்கும், குழப்பத்திற்கும் தான் இது இடம் அளிக்கும்.

தமிழக முதல் அமைச்சரும், அரசும் இதில் விழிப்போடு இருக்க வேண்டும். எந்தவித நிர்ப்பந்தங்களுக்கு - நெருக்கடிகளுக்கு ஆளாகி, தங்கள் ஆட்சியின் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்ளக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்.’’

இவ்வாறு அதில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.