சொந்த நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா கோரிக்கை!

Tuesday, 14 November 2017 16:42 Published in தமிழகம்

சென்னை(14 நவ 2017): சொந்த நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்தியக் கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இலங்கை போன்ற அயல்நாட்டு படையினரால் துப்பாக்கி சூட்டினாலும், தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது தற்போது இந்தியக் கடலோர காவல்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே புயல் கால சேமிப்பு நிதி வழங்காதது தொடர்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வந்த மீனவர்கள் அமைச்சர் அளித்த உறுதியின் அடிப்படையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பிச்சை என்ற மீனவருக்கு இடது முழங்கையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். அதே போன்று ஜான்சன் என்ற மீனவரும் படுகாயமடைந்துள்ளார்.

தமிழில் பேசிய மீனவர்களை இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தி, இந்தி மொழி தெரியாததாலும் தாக்கியுள்ளனர் இந்திய கடலோர காவல்படையினர்.

தமிழகத்தில் தமிழர் நலனை காக்க இயலாத ஒரு பலவீனமான ஆட்சி இருக்கின்றது என்ற துணிச்சலில் இந்த தாக்குதல் நடைபெற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்வதற்கு உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கடலோர காவல்படை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தவும், தாக்குதலில் காயமடைந்த மீனவர்களுக்கு உரியச் சிகிச்சை அளித்து, அதற்கான நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.