ஆளுநரின் வரம்பு மீறலுக்கு தலைவர்கள் கண்டனம்!

Tuesday, 14 November 2017 21:29 Published in தமிழகம்

சென்னை(14 நவ 2017): தமிழக ஆளுநர் வரம்பு மீறியதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுபவர் ஆளுநர். அரசியல் சட்டப்படி இதுதான் ஆளுநருடைய வேலை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ன எழுதி கொடுக்கிறதோ, அதை வாசிப்பதுதான் ஆளுநரின் கடமை. ஆண்டின் முதல் கூட்டத்தைத் தவிர வேறு எந்தக் கூட்டத்திலும் அவர் பங்கேற்க முடியாது. மாநில அரசு மீது ஊழல் புகார், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு உள்பட எந்த புகார் வந்தாலும், தலைமைச் செயலாளர், முதல் அமைச்சர் ஆகியோரை நேரில் அழைத்து விவாதிக்கலாம் அல்லது கடிதம் மூலம் விளக்கம் கேட்கலாம்.

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநர் பதவியை விமர்சனம் செய்துள்ளார்கள். ஜனாதிபதியின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர் பதவி வீண் ஆடம்பர பதவி என்றும் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மத்திய அரசுக்கு பிடிக்காத மாநில அரசாங்கத்தை மிரட்டவும், அரசியல் சட்டம் 356வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளை கவிழ்ப்பதற்கான அறிக்கையை பெறுவதிலும் மட்டுமே ஆளுநரை மத்திய அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அரசியல் சட்டத்தை மீறி ஒரு மாநில ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறி, கோவையில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆளுநர் தானே நேரடியாக அதிகாரத்தில் தலையிடுவது இதுவே முதல் முறை. ஆளுநரின் இந்த நடவடிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

முத்தரசன்

தமிழ்நாட்டில் மத்திய பாஜக ஆட்சி நடக்கிறது என்பதற்கு ஆளுநரின் ஆலோசனை உதாரணம். எடப்பாடி தலைமையிலான அரசு இதை அனுமதிக்க கூடாது. தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று எடப்பாடி கருதுகிறார். தன்மானமோ சுயகவுரவமோ எடப்பாடி அரசுக்கு இல்லை.

ஜி.ராமகிருஷ்ணன்

மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அதிகார வரம்பை தமிழக ஆளுநர் மீறுகிறார். மேலும் புதுச்சேரி போன்ற நிலை தமிழகத்துக்கு ஏற்பட கூடாது. எடப்பாடி அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிப்பது போல் உள்ளது.

கு. ராமகிருஷ்ணன்

ஆளுநரின் ஆலோசனை மாநில உரிமைகளை மீறும் செயல்ளார்.

ஈவிகேஎஸ்

தமிழகத்தின் உண்மையான முதல்வராக ஆளுநர் தான் செயல்படுகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும்.


வழக்கறிஞர் துரைசாமி

முதல்வர் சொல்வதன் அடிப்படையில்தான் ஆளுநர் செயல்பட வேண்டும். அதிகாரிகளும் அரசின் அனுமதி பெற்றே ஆளுநரை சந்திக்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் ஆளுநரை பார்த்தது சட்டப்படி சரியல்ல.

தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநர் ஆய்வு செய்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொள்ள கூடாது. ஆளுநர் ஆய்வு செய்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்த தேவையில்லை. அதிகாரத்துக்கு உட்பட்டு தான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும். ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூற முடியாது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.


பழ.கருப்பையா

புதுச்சேரி, டெல்லியை போல தமிழகத்திலும் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக பாஜகவினர் திரும்பியுள்ளனர். முக்கியமான மாற்றத்தை தமிழ்நாட்டில் இந்த சந்திப்பு ஏற்படுத்த போகிறது. மேலும் எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.