சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்து தாயையும் கொன்றவன் கைது!

சென்னை(06 டிச 2017): சிறுமி ஹாசினியை வன்புணர்ந்து கொலை செய்ததோடு தனது தாயையும் அடித்துக் கொலை செய்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்று அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரம் எரித்த இளைஞர் தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

பின்பு பெற்றோரின் முயற்சியில் ஜாமீனில் வெளியே வந்தவன் தனது தாயையும் கொலை செய்துவிட்டு பணம் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடினான். இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று மும்பையில் தலைமறைவாக தங்கியிருந்த தஷ்வந்த் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான். மும்பையில் அவனை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சென்னை கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.