பாபர் மசூதி இடிப்பு தினம் - திருச்சியில் விமான நிலையம் முற்றுகை!

திருச்சி(06 டிச 2017): பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருச்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

450 ஆண்டு காலம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மஸ்ஜிதை 1992 டிசம்பர் 6ம் தேதி நீதிமன்ற உத்தரவுகளை மீறி சங்பரிவார கும்பல் இடித்து தகர்த்தது. இடிக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றைய தினம்வரை பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் எந்த தண்டனைக்கும் உள்ளாக்கப்படவில்லை.

மத்திய அரசு அமைத்த லிபரஹான் கமிஷன் 63 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டிய பின்னரும் அவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் செய்யவில்லை.மாறாக அநீதியைப் பொறுக்காமல் உணர்ச்சிவசப்பட்ட முஸ்லிம் சமுதாய இளைஞர்களை ஆண்டுக் கணக்கில் சிறையில் வைத்திருக்கிறது. நீதிமன்றமோ ஆவணங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்காமல் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது.நீதிமன்றத் தீர்ப்பு தந்த தைரியத்தால் இந்துத்துவா இயக்கங்கள் இறுமாப்போடு திரிகின்றன.

இதனை முஸ்லிம் சமுதாய மக்களிடமும், நமது தொப்புள் கொடி உறவுகளான இந்து, கிறிஸ்தவ, தலித் மற்றும் நடு நிலையாளர்களிடம் கொண்டு செல்வதற்காக பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரியும். இன்று காலை 11.00 மணியளவில் திருச்சி விமான நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாநில துணைப்பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தலைமை தாங்கினார்.மாநிலச் செயலாளர் அபு ஃபைஸல், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு ஆவேசத்துடன் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் சென்னை,மதுரை,கோவை ஆகிய இடங்களிலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.