சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி!

துவரங்குறிச்சி(07 டிச 2017): திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே, நேற்று நள்ளிரவில் போர்வெல் லாரிமீது வேன் மோதியது. இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 10பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

நாகர்கோவில் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர், வைத்திலிங்கம். இவர், நேற்று மதியம் தனது குடும்பத்தினர் 15 பேர் சகிதமாக திருப்பதி கோயிலுக்கு டெம்ப்போ டிராவலர் வேனில் சென்றார். வேனை டிரைவர் ராஜேஷ் ஓட்டினார்.

இந்நிலையில் வாகனம் நேற்று நள்ளிரவு சுமார் 11.40 மணியளவில், மதுரை-திருச்சி சாலையில் உள்ள துவரங்குறிச்சி ஊருக்குள் செல்லும் மூரணிமலை திருப்பத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் லாரிமீது வேன் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த வைத்திலிங்கம் உள்பட 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்துகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்புப் படைவீரர்கள், விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய 5 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.