தமிழக முதல்வர் கைவிட்டதால் கேரள முதல்வரிடம் உதவி கோரிய தமிழக மீனவர்கள்!

திருவனந்தபுரம்(07 டிச 2017): ஓக்கி புயலில் சிக்கி உயிரிழந்து இதுவரை அடையாளம் தெரியாமல் உள்ள மீனவர்களிடன் உடல்களை கண்டு ஒப்படைக்கக்கோரி தூத்துக்குடி மீனவர்கள் கேரள முதல்வர் பிணராயி விஜயனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த ஜீடு (43), அவரது மகன் பாரத் (19), ரவீந்திரன்(50), ஜோசப் (70), கினிஸ்டன் (45), ஜேகன் (40) ஆகிய 6 பேரும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒக்கி புயலில் சிக்கினர். இதில் ஜேகன் தவிர அனைவரும் இறந்துள்ளனர். ஜேகன் உயிர்பிழைத்து திருவனந்தனபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் அறிந்தவுடன் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும், உறவினர்களும், திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 2-ஆம் தேதி சென்றனர். அங்கு உயிர் இழந்தவர்களை பார்த்துள்ளனர். எனினும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழுவின் கவனத்திற்கு தெரிய வரவே, அவர்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு, தூத்துக்குடி மீனவர்களின் நிலை குறித்து தெரிவித்து, இப்பிரச்சனையில் தலையிட்டு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் உடனடியாக கேரள மாநிலத் தலைவர்களைத் தொடர்பு கொண்டு, தூத்துக்குடி மீனவர்களின் நிலை குறித்துப் பேசினர்,

மேலும் நேற்று காலை மீனவர்களின் குடும்பத்தினர், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்தனர். திருவனந்தபுரத்தில் நடந்த இந்த சந்திப்பில் “மீனவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவும், அதனடிப்படையில் உடல்களை அடையாளம் கண்டு, விரைந்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்; உடல்களை தூத்துக்குடிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகன ஏற்பாடு செய்துதர வேண்டும்” என்று மீனவர்களின் குடும்பங்கள் பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்த கேரள முதல்வர், தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.