நடிகர் விஷாலின் வேட்புமனு மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பு!

சென்னை(07 டிச 2017): ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர். கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நடிகர் விஷாலின் வேட்புமனுவில் முன்மொழிந்துள்ள 10 பேரில் சுமதி, தீபன் என்ற 2 பேர் போலியாக சேர்க்கப்பட்டு இருப்பதாக சில வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் சுமதி, தீபன் இருவரையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முன்பு ஆஜர்படுத்தினார்கள். இதனை அடுத்து “விஷால் வேட்பு மனுவில் இருப்பது எங்கள் கையெழுத்து இல்லை” என்றனர். அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, “விஷாலை போதுமான அளவு நபர்கள் முன்மொழியவில்லை” என்று கூறி அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதை ஏற்க மறுத்த விஷால் தேர்தல் அதிகாரியை சந்தித்து “சுமதி, தீபன் இருவரும் மிரட்டப்பட்டுள்ளனர்” என்றார். மேலும் அது தொடர்பான ஆடியோ பதிவு ஒன்றையும் காட்டினார். அதனை ஆதாரமாக வைத்து வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முதலில் தனது வேட்புமனுவை ஏற்பதாக கூறி விட்டு பிறகு இரவில் முடிவை மாற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த விஷால் தேர்தல் அதிகாரி தன் மனுவை ஏற்பதாக கூறி கை குலுக்கியதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் விஷால் கூறினார்.

இதையடுத்து விஷாலுக்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தன. இதனால் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்த நிலையில் நடிகர் விஷால் நேற்று மாலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் கொடுத்தார். வேட்புமனு பரிசீலனையின் போது நடந்தது என்ன என்பதை அவர் மனுவில் எழுதி கொடுத்தார்.

பிறகு அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் புகார்கள் அனுப்பினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து புகார் கொடுக்கவும் விஷால் திட்டமிட்டுள்ளார். மேலும் சட்ட ரீதியாக போராடவும் அவர் ஆலோசித்து வருகிறார்.

விஷால் வேட்புமனு விவகாரம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இதுகுறித்து தேர்தல் கமி‌ஷன் மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். நடிகர் விஷாலின் வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்யலாமா? என்று அந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324-ன்கீழ் சர்ச்சைக்குரிய வேட்பு மனுவை மீண்டும் பரிசீலனை செய்ய உத்தரவிடும் அதிகாரம் தேர்தல் கமி‌ஷனுக்கு உள்ளது. இன்று பிற்பகலுக்குள் அத்தகைய உத்தரவு வருமா? என்று விஷால் தரப்பினர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் நல்ல முடிவு வரும் என்று விஷாலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.