போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ்!

Thursday, 11 January 2018 19:59 Published in தமிழகம்

சென்னை(11 ஜன 2018): நீதிமன்ற உத்தரவை ஏற்று போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 8-வது நாளை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலையில் சுமார் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படாததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நேரத் தில் ஸ்டிரைக் நடப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஸ் ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது நீதிபதிகள், “கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளை உடனே இயக்க வேண்டும். வழக்குகளை பிறகு விரிவாக விசாரித்துக் கொள்ளலாம். எனவே பேருந்துகளை இயக்குங்கள்”என்று அறிவுறுத்தினார்கள்.

ஆனால் போராட்டம் முடிவுக்கு வராமலேயே இருந்தது. இதற்கிடையே போக்குவரத்து ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நடுவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இனிமேல் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து பத்மநாபன் விசாரிப்பார் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 0.13% ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை பத்மநாபன் நடத்துவார் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமன உத்தரவையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இதனை அடுத்து நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தற்காலிகமாக பேருந்தை இயக்க முடிவு செய்துள்ளதாக தொழிற்சங்க வழக்கறிஞர் தெரிவித்தார். மக்கள் நலன் கருதி நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்கிறோம் - தொழிற்சங்க தரப்பு வழக்கறிஞர்

இதை தொடர்ந்து 8 நாளாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனது.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.