எந்த ஒரு மதத்தையும் விமர்சிப்பதில் திமுகவுக்கு உடன்பாடில்லை: ஸ்டாலின்!

Friday, 12 January 2018 21:49 Published in தமிழகம்

சென்னை(12 ஜன 2018): ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு எச் ராஜா கடும் வார்த்தைகளால் வைரமுத்துவை விமர்சித்துள்ள நிலையில் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழை ஆண்டாள்" என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க தனியார் நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக விளக்கம் அளித்து "யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

அக்கட்டுரையைப் பிரசுரித்த நாளிதழிலும் "ஆசிரியர் வருத்தம்" என்றெல்லாம் போடாமல், இதழின் பெயரையே போட்டு வருந்துகிறது" என்று ஒட்டுமொத்தமாக நாளிதழே வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்து மதம் உள்ளிட்ட எந்தவொரு மதத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை.

"வேற்றுமையில் ஒற்றுமை" என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் அனைத்து மதத்தினரும் சாதி வேறுபாடின்றி, "சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை" போன்றநெறிகளை உயர்த்திப் பிடித்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதுதான் திமுகவின் விருப்பம்.

ஆனால் "வெறுப்பு அரசியலுக்கு எப்போது விதை தூவலாம்; வெறுப்புக் கனலை விசிறிவிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்" என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் தாங்கள்தான் ஒட்டு மொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து மீதும், அக்கட்டுரையை வெளியிட்ட நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பது.

பத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மிரட்டுவதும் துளியும் நாகரிகமானது அல்ல என்பதோடு மட்டுமல்ல- மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்று திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், தரம் தாழ்ந்த வகையிலும் தமிழ் மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்று திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் .

இவ்வாறு ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments   
0 #1 சுகுமாரன் 2018-01-13 12:10
மன்னிப்பு கேட்ட பின்னரும் போராடுவது தேவையற்றது.முதலில் ஆண்டாள் தேவதாசி மரபினர் என்றது வைரமுத்துவின் சொந்த கருத்தே அல்ல.ஆய்வு நூலில் உள்ளதை தான் எடுத்தாண்டிருக்கிறார்.மன்னிப்பு கேட்க வேண்டியது அதை எழுதியவர்தான்.போராட வேண்டியது அந்த நுலாசிரியருக்கு எதிராகத்தான்.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.