உலகின் சிறந்த கால்பந்தாட்ட அணிகளுள் எகிப்தின் அணியும் ஒன்று. அங்குள்ள போர்ட் சயீத் துறைமுகநகரில் நேற்று நடைபெற்ற உள்ளூர் குழுமச்சுற்று ஆட்டம் ஒன்றில் கலவரம் ஏற்பட்டு 70க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
எகிப்தின் புகழ்பெற்ற அல்அலி கிளப் அணியும் அல்மஸ்ரி அணியும் மோதின போட்டியைக் காண ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். எகிப்து நாட்டு தொலைக்காட்சியில் இந்த போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
எதிர்பாராவிதமாக, எதிர்பார்க்கப்பட்ட அல்அலி அணி தோல்வி அடைந்தது. அல்-மஸ்ரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அல்அலி அணியை வீழ்த்தியது. இதனால் அல்மஸ்ரி அணி ரசிகர்கள் வெற்றி கோஷமிட்டு ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.
இதை அல்அலி குழும ரசிகர்கள் எதிர்த்தனர். இதனால் மைதானத்தில் திடீர் கலவரம் வெடித்தது. நடுவர் போட்டி முடிந்ததாக இறுதி நீண்ட விசில் ஊதிய மறு வினாடி, அல்-மஸ்ரி ரசிகர்கள், மைதானத்துக்குள் நாலாபுறமும் இருந்து கூச்சலிட்டப்படி ஆவேசமாக புகுந்தனர்.
அல்அலி கிளப்பைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களை அவர்கள் ஓட, ஓட விரட்டி தாக்கினார்கள். கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். கத்தி, கம்பு, பாட்டில் உள்பட கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வந்து தாக்கினார்கள். ஸ்டேடியத்தின் ஒரு பகுதியில் தீ வைக்கப்பட்டது.
கூட்ட நெரிசல், தாக்குதலில் அடைந்த காயம் என மைதானத்தில் 73 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எகிப்து கால்பந்து வரலாற்றில் இது மோசமான மற்றும் துயரமான சம்பவம் என அந்நாடு அறிவித்துள்ளது
எகிப்து நாடே இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. போர்ட்சயீத் நகரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அந்த நகரில் இன்று மயான அமைதி நிலவியது.
வரலாறு காணாத கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
எகிப்து: கால்பந்தாட்டத்தில் கலவரம் 70 க்கும் அதிகமானோர் பலி!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed