திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையும் “சிண்டா” என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுக் கழகமும் இணைந்து,
சென்ற ஞாயிற்றுக்கிழமை 19-02-2012 அன்று “உங்கள் குழந்தைகள் கணிதத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற எவ்வாறு உதவலாம்?” என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான இலவச கணிதப் பயிலரங்கு ஒன்றை காலை மணி 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடத்தியது.
சுமார் 80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து பயன்பெற்ற, இந்த இலவச கணிதப் பயிலரங்கை ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவரும், 26 ஆண்டுகள் அனுபவம் பெற்ற கணித விரிவுரையாளருமான திரு அமானுல்லா வழி நடத்தினார்.
சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமுதாயப் பணிகள் ஆற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்ட ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்பை பாராட்டும் வண்ணம், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
சங்கத் தலைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர் பயிலரங்கின் துவக்க உரையில் ஜமால் முஹம்மது கல்லூரியின் 61 ஆண்டு கால உயர்கல்வி சாதனைகளையும் பெருமைகளையும் பற்றி எடுத்துரைத்தார்.
சிண்டா அதிகாரிகள், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து பயன்பெற்ற இப்பயிலரங்கு மதிய உணவுடன் இனிதே நிறைவுற்றது.
- முதுவை ஹிதாயத்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
மாணவர்கள் நடத்திய பெற்றோர்களுக்கான இலவச கணிதப் பயிலரங்கு!