ரஷ்ய விமானம் விபத்து; விசாரணைக்கு உத்தரவு! Featured

மாஸ்கோ(25 டிச 2016): ரஷ்ய விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ரஷ்யாவின் சோச்சியில் இருந்து சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி பயணித்த டியு-154 ரஷ்ய விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் அதில் பயணம் மேற்கொண்ட 92 பேரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த விமானத்தின் சிதைவுகள், கருங்கடலில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் சோச்சி நகர கடலோர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு பயணியின் உடல், சோச்சி நகர கடலோரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விமான விபத்துக்கு பயங்கரவாத தாக்குதலோ, மோசமான வானிலையோ காரணமாக இருக்காது என்றும், விமானத்தின் தொழில் நுட்பக்கோளாறு அல்லது விமானியின் தவறுதான் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டு உள்ளார்.