வானத்தில் திடீரென குலுங்கிய விமானம்: பீதியில் மக்கள்! Featured

சிட்னி(27 ஜூன் 2017): வானத்தில் ஏர் ஆசியா விமானம் குலுங்கியதால் பயணிகள் பீதியடைந்தனர்.

ஆஸ்திரேலியா சிட்னி நகரிலிருந்து மலேசியா நோக்கி சென்ற விமானம் எந்திர கோளாறு காரணமாக நடு வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென குலுங்கியது. இதையடுத்து விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி ஏர் ஆசியா விமானம் ஒன்று சென்றது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தார். சுமார் 90 நிமிடத்தில் விமானம் கோலாலம்பூர் செல்ல இருந்த நிலையில் நடுவானில் பறந்த போது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதனால் பயணிகள் பீதி அடைந்து அலறினர்.

உடனடியாக கோளாறை புரிந்து கொண்ட பைலட் விமானத்தை சாதுர்யமாக திருப்பி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் அவசரமாக தரையிறக்கினார். இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த பயணிகள் நல்வாய்ப்பாக பத்திரமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது வாஷிங் மெஷின் போல விமானம் கடகடவென குலுங்கியது. நாங்கள் அனைவரும் அப்படியே பீதியில் உறைந்து போனோம் என்றார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.