பிலிப்பைன்சில் கிழக்கு ஆசியா உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு! Featured

Monday, 13 November 2017 11:58 Published in உலகம்

மணிலா(13 நவ 2017): பிலிப்பைன்சில் நடைபெறும் 15 வது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ஆசியான் நாடுகளின் 50–வது ஆண்டு சிறப்பு விழா, 15–வது இந்தியா–ஆசியான் மற்றும் 12–வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

அங்கு ஆசியன் மாநாடு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் வரவேற்றார். நிகழ்ச்சியின் போது உலக தலைவர்கள் அனைவரும் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

மணிலா நகரில் 3 நாட்கள் தங்கியிருக்கும் மோடி இன்று(திங்கட்கிழமை) பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டேவை சந்தித்து இரு நாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்தும், இணைப்பு வழித் தொடர்பு, வர்த்தகம், முதலீடு, ராணுவம் உள்ளிட்ட துறைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

இன்று நடைபெறும் ஆசியான் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின், ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், ரஷிய பிரதமர் திமிட்ரி மெட்வடவே ஆகியோரும் பங்கேற்கின்றனர். மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே ஜனாதிபதி டிரம்பை, பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமான முறையில் சந்தித்து பேசுகிறார்

முன்னதாக மணிலா சென்றடைந்த மோடிக்கு அங்குள்ள விமான நிலையத்தில் பிலிப்பைன்ஸ் அரசு மற்றும் இந்திய சமூகத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் வருகை தந்துள்ளனர். உலகநாடுகளின் தலைவர்களுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே சிறப்பு விருந்து அளித்தார்.

பிரதமர் ஆன பிறகு மோடி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தகக்து.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.