IT HOT NEWS என்ற பெயரில் இயங்கி வரும் www.itnewshot.blogspot.com என்ற வலைப்பூவைத் திரு. செல்வமுரளி நடத்தி வருகிறார். எவ்வளவுதான் நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொண்டாலும் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் ஆபாசத்தை ஏதாவது வகையில் பதிவுகளாக தம் வலைப்பூக்களில் நுழைத்துவிடும் வலைப்பதிவர்களுக்கிடையில்,
இவ்வலைப்பூவுக்காக தாம் எடுத்த தலைப்பிலிருந்து வழுவாமல் தொழில் சார்ந்த பல நுட்பமான தகவல்களைத் தொடர்ந்து பதிந்து வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டம் மாதூரைச் சேர்ந்த திரு. செல்வமுரளி. இந்த ஒரு விஷயத்திற்காகவே நாம் முதலில் அவரைப் பாராட்ட வேண்டும்!
ஐட்டி ஹாட் நியூஸ் என்ற இந்த வலைப்பூ 2008 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் சிலப் பதிவுகள் ஆங்கிலத்தில் பதிந்திருந்தாலும் பின்னர் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களையும்கூட அழகான தமிழில் மொழிபெயர்த்து, முழுக்கத் தமிழில் நுட்பத் தகவல்கள் இடம்பெற்று வருகின்றன.
வலைப்பூவின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், ஹெட்டர் பகுதியில் தெரியும் கோடிங் பிரச்சனையும் தலைப்பு எழுத்தின் வண்ணத்தையும் சீராக்கினால் காண்பதற்கு மேலும் தோற்றப்பொலிவினை உண்டாக்கும். வலைப்பூக்களுக்காக இலவசமாகக் கிடைக்கும் எண்ணற்ற விட்ஜெட்களைக் கொண்டு நிறைக்காமல், பதிவுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வலைப்பூவை வடிவமைத்திருப்பது சிறப்பு.
இணையம், புத்தக மதிப்புரை, நுட்பத்தகவல்கள் என நிறைந்திருக்கும் இந்த வலைப்பூ, இளம் தலைமுறையினை வழிகெடுக்காமல் அவர்களின் முன்னேற்றத்திற்கான விஷயங்களைச் சிறப்பாக கொடுக்கும் இடம் என்று குறிப்பிடலாம். பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்துவைக்கத் தகுதியான திரு. செல்வமுரளியின் இந்த வலைப்பூ, சமூகத்திற்கு நலம் விளைவிக்கும் விஷயங்களை மட்டுமே இதே போன்று தொடர்ந்து பதிந்து வர வாழ்த்துகிறோம்.
தன்னைக் குறித்து விவரித்துள்ள தகவல் பக்கத்தில் திரு. செல்வமுரளி குறிப்பிட்டிருக்கும், "....தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகள், "நன்மைகள் நம்மிடமிருந்தே பிறந்து வரட்டும்; தீமைகள் நம்மிலிருந்து அழிந்து போகட்டும்" என்ற உயர்ந்த இலட்சியத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இச்சிந்தனையின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தம் செயல்பாடுகளைத் தூய்மையானதாக அமைத்துக்கொண்டால், அவரவருக்கு நடப்பவை அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்பதை அழகாக குறிப்பிடும் இந்த வாசகத்துக்குத் தம் தகவல் பக்கத்தில் இடம் கொடுத்துள்ள திரு. செல்வமுரளிக்கு அனைத்தும் நன்றாகவே நடக்கவும் வாழ்த்துவோம்.
Comments
Will visit the web. Keep it up
Mr. Selva murali
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed