ஹஸாரே போராட்டம் சட்ட விரோதம் - நீதிமன்றத்தில் வழக்கு!
மேற்கண்ட செய்தியில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
//மங்களேஸ்வர் திரிபாதி என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், "அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், மும்பையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதைத் தொடர்ந்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்த போவதாகவும், அன்னா ஹஸாரே குழுவினர் அறிவித்துள்ளனர். இதை சட்டவிரோதம் என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு குலையாமல் பாதுகாக்கப்படும் என்பதை ஹஸாரே குழுவினரிடம் உறுதி பெறவேண்டும்//.
இந்த வழக்கு தாக்கல் முதல் நோக்கிலேயே முட்டாள் தனமானது என்பது தெளிவு. ஏனெனில், போராட்டத்தைச் சட்ட விரோதம் என்று அறிவித்தால் பின் போராட்டம் நடக்கவே வாய்ப்பில்லை. அப்புறம் எதற்கு, ‘‘போராட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு குலையாமல் பாதுகாக்கப்படும் என்பதை ஹஸாரே குழுவினரிடம் உறுதி பெறவேண்டும்’’ என்ற கோரிக்கை?
//மேலும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிராக, அறிக்கை விடக்கூடாது எனவும் ஹஸாரே ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதுபோன்ற சட்டமீறல்களை அனுமதித்தால், நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு பாதிக்கப்பட்டு, குழப்பமான சூழல் உருவாகும்." என்று தெரிவித்துள்ளார்//.
சாதாரணமாக ஒரு மனுவை எப்படி கட்டமைப்பது என்பதே மங்களேஸ்வர் திரிபாதிக்கும் அவரது சார்பாக வக்காலத்து வாங்க முன்வந்துள்ள கூலிக்கு மாரடிக்கும் பொய்யர் அல்லது இடைத்தரகரான வக்கீலுக்கும் தெரியாத போது, உலகின் முன்னணி குடியரசான இந்திய குடியரசைக் காக்க வல்ல அரசமைப்பின் கட்டமைப்பு பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?
அறிக்கை விடுவது என்பது, அடிப்படை உரிமையான எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சுரிமையே! அது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கிறதா, இல்லையா, எல்லை மீறியிருக்கிறதா என்பதை அறிக்கை வெளியிட்ட பின்னர்தான் முடிவெடுக்க முடியும். எல்லையை மீறி இருந்தால் அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்க கட்சிக்கு வாய்ப்புண்டு.
உண்ணா விரதப் போராட்டம் சட்ட மீறல் என்றால் எந்த சட்டத்தின், எந்தப் பிரிவின் கீழ் என்பதை மனுவில் தெளிவுபடுத்த வேண்டாமா? அத்தோடு இச்சட்ட மீறலுக்கு, முன்பு மத்திய அரசு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்ததற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர வேண்டாமா?
பல நாட்டு அரசமைப்பில் இருந்தும் நல்ல நல்ல விடயங்களை தொகுத்து உருவாக்கியதுதான் நமது இந்திய அரசமைப்பு. இந்தக் கட்டமைப்பில் எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது அதிகார பீடங்களான நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் என எவருக்குமே உச்சபட்ச அதிகாரம் கிடையாது. பரவலாக்கப்பட்ட அதிகாரம்தான் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது "ஒரு அதிகார பீடம் நியாமில்லாது மமதையில் செய்யும் எந்த ஒரு தவறான செயலையும், மற்ற அதிகார பீடம் திருத்த முடியும்". அவர்களுக்கு உள்ளேயே சரி செய்து கொள்ளவில்லை என்றால், "ஒரு தனி நபர் கூட வழக்கு தொடுத்து ஒரு விடயத்தை கொண்டு வரவோ நீக்கறவு செய்யவோ முடியும்".
இப்படி தருமபுரியை சேர்ந்த தொழிலாளியான சித்ரா என்ற பெண் தொடுத்த வழக்கால்தான், இன்று இந்தியா முழுவதும் இரவு நேரப்பணிகளுக்கு பெண்கள் செல்ல முடிகிறது. இவைகள் பற்றியெல்லாம் எனது மூன்றாவது நூலான சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் எழுதியுள்ளேன்.
பரவலாக்கப்பட்ட அதிகார பீடங்கள், லோக்பால் தங்களை தாக்க வல்லது என்பதாலேயே அக்கறை காட்டாமல் இருக்கும் போது, குடிமக்கள்தான் லோக்பாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாக வேண்டும்.
- சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
Please keep on going.
Your ocmments are welcome to enlighten our Indians.
with regards
G.Chandrasekaran
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed