இந்திய நாடாளுமன்றம் இறைமை வாய்ந்ததாகவும் நாட்டின் இறையாண்மையே நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அதாவது எம்.பி-க்கள் அவற்றையெல்லாம் கண்டு கொள்வது கிடையாது.
ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்குவது என்று தங்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவ உரிமை(!)யை நன்றாக வெளிப்படுத்தி வருகின்றனர். இது போதாதென்று பல்வேறு கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய 545 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 162 பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் நாடெங்கிலும் உள்ள பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மக்களின் பிரதிநிதிகள் என்பதால் இவர்கள் மீதான வழக்குகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன(பொதுவாகவே இந்திய நீதிமன்றங்களில் வழக்குகள் அனைத்தும் ஆமை வேகத்தில் தான் நடந்து வருகின்றன என்பது தனி விஷயம்).
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் தேர்தல் கமிஷனர் ஜே.எம்.லிங்டோ உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில்,
"நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் கவனிக்கப்படாமல் உள்ளன. அந்த வழக்குகள் அனைத்தையும் அதிவிரைவு (பாஸ்ட் டிராக்) நீதிமன்றத்துக்கு மாற்றி, விரைவில் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்கவேண்டும்"
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பொதுநல மனுமீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இம்மனுவை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள்,
"அனைத்து மாநிலங்களிலும் விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் 162 எம்.பி-க்கள் மீதான கிரிமினல் வழக்குகளைச் சேர்த்து விசாரிக்கலாம். இது குறித்து மத்திய அரசு கருத்து தெரிவிக்க வேண்டும்."
என்று மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த நோட்டீஸுக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்திய அரசு சம்மதம்கூறி, ஒருவேளை விசாரணை நடந்தாலும் உரிய தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. "வழக்கில் உண்மையில்லை" என்று தள்ளுபடி ஆகவும் வாய்ப்பு உள்ளது. "சாட்சிகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை" என்று விடுதலை செய்யவும் வாய்ப்புள்ளது. அப்படியே சிலவேளை குற்றம் செய்ததாக எம்.பி-க்கள் தண்டிக்கப்பட்டாலும்கூட, அவர்கள் தண்டனையை உரிய முறையில் சிறையில் அனுபவிப்பார்களா அல்லது கேரளாவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தண்டிக்கப்பட்டபோது நடந்ததைப் போன்ற தில்லுமுல்லுகள் நடைபெறுமா என்பதுகூட பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
| < முந்தைய செய்தியை வாசிக்க... |
|---|