தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் அவரின் வீட்டருகே அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பதட்ட நிலை காணப்படுகிறது. தலித் மக்களிடையே அறியப்பட்டிருந்த தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பசுபதி பாண்டியன். இவரின் படுகொலையால் தென்மாவட்ட போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பசுபதி பாண்டியனைக் கொலை செய்தவர்களைக் குறித்து காவல்துறை படுவேகத்தில் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசுபதி பாண்டியனுக்கும் மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் ஒருவரின் குடும்பத்தினருக்கும் இடையே பரம்பரை பகை போன்று நீண்டகால பகை இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரின் குடும்பத்திற்குமிடையே பழிக்குப் பழியாக நடந்த மோதல்களில் பலர் உயிர் இழந்துள்ளனர். அவர்களுக்கிடையிலான முன்விரோதமே இப்போதைய பசுபதி பண்டியனின் படுகொலைக்கும் காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பசுபதி பாண்டியனின் தந்தை தூத்துக்குடி மேலஅலங்காரதட்டையைச் சேர்ந்த சிதம்பரம். 1990ம் ஆண்டில் அந்தப் பகுதியில் இரு பிரிவினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக 31-8-90ல் சிலுவைபட்டி மிக்கெல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் பசுபதி பாண்டியனின் பெயரும் சேர்க்கப்பட்டது. ஒரு கொலை வழக்கில் பசுபதி பாண்டியனின் பெயர் இடம் பெறுவது அதுவே முதல்முறை.
அதன் பின்னர் பல கொலை வழக்குகளில் பசுபதி பாண்டியனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு 9 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 18 கிரிமினல் வழக்குகள் பசுபதி பாண்டியன்மீது பதிவாகின. மூன்று முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பசுபதி பாண்டியன், இக்கால கட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே பிரபலமானார்.
1990 களில் பழைய காயல் அருகேயுள்ள புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடார் என்பவருக்கும் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு நடந்து வந்தது. இதில் பசுபதிபாண்டியன் புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பசுபதி பாண்டியனுக்கும் பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடாருக்கும் இடையே பகைமை வளர்ந்தது. 24-1-93 ல் சிவசுப்பிரமணிய நாடார் மகன் அசுபதி பண்ணையாரை பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர்.
இதற்கு பழி வாங்கும் நோக்கில் 21-4-93 ல் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் பசுபதி பாண்டியனின் நண்பர் பொன்இசக்கி பலியானார். படுகாயங்களுடன் பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார்.
தொடர்ந்து 8-7-93 ல் சிவசுப்பிரமணிய நாடாரைப் பசுபதிபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே அடுத்தடுத்து மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் பல உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது.
இதற்குப் பின்னர் பலமுறை சிவசுப்பிரமணிய நாடார் ஆதரவாளர்களால் பசிபதி பாண்டியன் கொலை முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால், அவற்றிலிருந்தெல்லாம் பலமுறை பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார்.
கடந்த 6-4-2006 ல் பசுபதி பாண்டியன் தன் மனைவி ஜெசிந்தா பாண்டியனுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே அவர்கள்மீது வெடிகுண்டு வீசப்பட்டது. தொடர்ந்து சரமாரியா அரிவாளால் வெட்டியதில் பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். அப்போதும் பசுபதி பாண்டியன் உயிர் பிழைத்துக் கொண்டார்.
இந்நிலையிலேயே பசுபதி பாண்டியனின் மனைவி கொல்லப்பட்டதன் 5 ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது பசுபதி பாண்டியனும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே இக்கொலைக்கும் பண்ணையார் ஆதரவாளர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
எது எப்படியிருந்தாலும் தென் மாவட்டங்களைப் பீடித்துள்ள இந்தக் குழு மோதல்களும் தாக்குதல்களும் நிறுத்தப்படவேண்டும். மக்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை அரசு விரைந்து ஏற்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு அமைதியான சூழல் விரைந்து திரும்பட்டும்!
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
iranthavar oru rowdy avaruku pala valikalil ethirikal irukkalam
intha news sathi sandaiyae thunduvathu pol ullathu
அவரை இஸ்லாத்திற்குள் வர தடுத்தது எது ....யார்?
நண்பர் ரோபின் குறிப்பிட்டதைப்போல ரவுடிகளை ரவுடிகளாக பார்க்க வேன்டுமே தவிர, அவர்களின் சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிடுவதால் சமூகத்தில் பதட்டம் அதிகரிக்குமே அல்லாமல் வேறு நன்மை ஒன்றும் விளையப்போவதில்லை....
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed