திருமங்கலத்திலிருந்து மதுரை நகருக்குள் வராமல் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் செல்ல கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரிங்ரோடு அமைக்கப்பட்டது. அந்தச் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு 5 இடங்களில் டோல் கேட் அமைத்து மாநகராட்சி சார்பில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் நன்றாக இருந்த ரிங்ரோடு தற்போது படுமோசமாகி, பெரும்பாலான இடங்களில் ஆள்விழுங்கி பள்ளங்கள் உருவாகியுள்ளன. இவற்றில் எதிர்பாராத விதமாக விழும் வாகனங்களால் எப்போது விபத்து நேருமோ என்ற நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், படுமோசமாக உள்ள இந்த ரிங் ரோட்டைச் சீரமைக்க மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக சிந்தாமணி 3 வது டோல் கேட் அருகில்தான் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இது குறித்து பலமுறை செய்திகள் வெளியிட்டும் ரிங்ரோட்டைச் சீரமைக்க எந்த அக்கறையும் காட்டப்படவில்லை.
இந்நிலையில்தான், மாடுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று சிந்தாமணி 3 ஆவது டோல் கேட் அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. வளைவுக்குப் பிறகு பள்ளமிருப்பதை அறியாமல் வந்த லாரியின் ஓட்டுனர், திடீரென முன்பு பள்ளமிருப்பதைப் பார்த்து லாரியை இறக்காமல் இருக்க திடீர் பிரேக் போட்டதில் 2 வாலிபர்கள் இறந்ததோடு, அதில் ஏற்றி வந்த 9 பசுமாடுகளும் பலியாகியுள்ளன.
இனிமேலாவது இது போன்ற கோரசம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போர்க்கால நடவடிக்கையில் ரிங்ரோட்டைச் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்பதுதான் கேள்வி.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|