இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் அரசியல் விமர்சனம் மம்தா-காங்கிரஸ் மோதல்: சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமா திமுக?

மம்தா-காங்கிரஸ் மோதல்: சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமா திமுக?

லோக்பால் மசோதா மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் குடைச்சல் கொடுத்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்குமிடையேயான உரசல்கள் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பாஜகவின் துணை அமைப்பு என்று காங்கிரஸ் சாடிய நிலையில் பதிலுக்கு மம்தாவும் காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி சேர்ந்து கொண்டு மேற்கு வங்க அரசை எதிர்த்து வருவதாகவும் தங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்றும் கதவுகள் திறந்தே உள்ளன என்றும் கூறி காங்கிரசுக்கு அதிர்ச்சி அளித்தார்.

மேல்மட்டத் தலைவர்கள் ஒரு பக்கம் சமாதான முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் நிலைமை அத்துமீறிப் போவதைத் தடுக்க முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியையும் காங்கிரஸ் கவனத்தில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக அஜீத் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து அஜீத் சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் சனிக் கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட குஷ்வாகாவைக் கட்சியில் சேர்த்த விவகாரத்தால் பாரதிய ஜனதா கூடாரமும் கதி கலங்கிப் போய் நிற்கும் நிலையில், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினால் ஓட்டுகள் நாலா பக்கமும் சிதறும். இந்நிலையில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புண்டு.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டு  கால ஆட்சியில் தயாநிதி மாறனுக்குத் தகவல் தொழில் நுட்பத் துறை வழங்கப் பட வில்லை என்றதும் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்து வேண்டிய துறைகளை மிரட்டிப் பெற்ற கருணாநிதிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் கால ஆட்சி பொற்காலமாக அமைய வில்லை. காங்கிரசை மிரட்டிய காலம் போய் காங்கிரஸ் திமுகவை மிரட்டும் காலம் வந்து விட்டது.

இந்நிலையில் மம்தா - காங்கிரஸ் மோதல் திமுகவுக்கு மீண்டும் பழைய அந்தஸ்தைக் கொடுக்கக் கூடும். நிலையைச் சரிவரப் பயன்படுத்தி இழந்த துறைகளைத் திமுக மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: