இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் அரசியல் விமர்சனம் சசிகலா அதிரடி நீக்கத்தின் பரபரப்புப் பின்னணி!

சசிகலா அதிரடி நீக்கத்தின் பரபரப்புப் பின்னணி!

சசிகலா அதிரடி நீக்கத்தின் பரபரப்பு பின்னணிதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியாக அறியப் பட்ட  ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது அண்ணன் திவாகரன், அக்கா வனிதா மணியின் மகன்கள் பாஸ்கரன், டி.டி.வி தினகரன், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன்,

டாக்டர் வெங்கடேஷ், ராவணன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன், மிடாஸ் மோகன், மகாதேவன் மற்றும் தங்கமணி ஆகிய 14 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. நீக்கப் பட்ட 14 பேருடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதிமுகவினருக்கு எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

சமீப காலமாகவே ஜெயலலிதா - சசிகலா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர் உளவுத் துறையின் டி.ஐ.ஜி யாக பொறுப்பில் இருந்த பொன் மாணிக்கவேல் அந்தப் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டு விழுப்புரம் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஐ.ஜி யாக நியமிக்கப் பட்டார். மதுரையில் திரைப் பட பைனான்சியர் அன்புச் செழியன் கைது செய்யப்பட்ட போது பொன் மாணிக்க வேல் தலையிட்டு மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கார்க்கிடம் அன்புச் செழியன்மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆஸ்ரா கார்க் அதற்கு உடன்படாததோடு ஆட்சியின் மேலிடத்திற்கு இத்தகவலைக்  கொண்டு சென்றதாகவும் தெரிகிறது.

வளர்ப்பு மகன் சுதாகரனின் பினாமியாக அறியப்பட்ட  அன்புச் செழியனை விடுவிக்க உளவுத் துறை டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேல் எடுத்துக் கொண்ட அக்கறை காரணமாகவே பொன் மாணிக்கவேல் அதிரடியாக மாற்றப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்ட ஓய்வு பெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர் செல்வம் கடந்த 13 அன்று தம் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி திருமலைச் சாமி அதிரடியாக நீக்கப் பட்டார். பன்னீர் செல்வம் மற்றும் திருமலைச் சாமி இருவருமே சசிகலாவுக்கு ரொம்ப நெருக்கமானவர்கள் என்று கூறப் படுகிறது.

சசிகலாவுக்கு நெருக்கமான பன்னீர் செல்வம்தான் பசுமை வீடுகள் திட்டம் மற்றும் மோனோ ரயில் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் கவனித்து வந்ததாகவும் அவர் செய்த குளறுபடியால் பசுமை வீடுகள் திட்டத்தின் தொடக்க விழா இரு முறை தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும், மோனோ ரயில் திட்டத்தைச் சசிகலாவுக்கு நெருக்கமான சிங்கப்பூர்  தொழிலதிபர் ஒருவர் டெண்டர் எடுப்பதற்கு வசதியாக காலதாமதம் செய்யப் பட்டு சில விதிமுறைகள் திருத்தப் பட்டுள்ளதாகவும் முதல்வர் காதுகளுக்கு எட்டவே பன்னீர் செல்வம் அதிரடியாக விலக்கப் பட்டுள்ளார் என்றும் தெரிகிறது.

மேலும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக பெங்களூரு சென்ற சசிகலாவை வளர்ப்பு மகன் சுதாகரன் உள்ளிட்ட ஜெயலலிதாவின் கோபத்துக்கு உள்ளான சசிகலா குடும்பத்தினர் சிலர் சந்தித்துப் பேசிய செய்திகளும் உளவுத் துறை மூலம் ஜெயலலிதாவின் காதுக்குப் போகவே தம்மைச் சுற்றி சதிவலை பின்னப் படுவதை தாமதமாகவே உணர்ந்துள்ளார் ஜெயலலிதா. அன்றைய தினமே சென்னையில் தங்கி இருந்த சில அமைச்சர்களை அழைத்து இனி சசிகலாவை யாரும் சந்திக்கக் கூடாது என்றும் அவருடைய உத்தரவுகளை நிறைவேற்றத் தேவை இல்லை என்றும் எந்நேரமும் தம்மிடமே ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாகவும் கூறப் படுகிறது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்து ஜெயலலிதா பதவி விலக நேரிட்டால் முதல்வராக சசிகலாவின் கணவர் நடராஜனை நியமிக்கவும் அதற்கு உதவியாக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை வளைத்துக் கட்சியைக் கைப்பற்றவும்  சசிகலா தரப்பு முயன்று வருவதாகவும் கூறப் படுகிறது.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக சார்பில் போட்டியிட்ட 160 பேரில் சுமார் பாதி பேர் சசிகலா சமூகத்தைச் சேர்ந்த முக்குலத்தொர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்த நிலையில்  வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ க்களில் 69 பேர் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப் படுகிறது. அதிகார மையத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு அமைச்சர்கள் நியமனம், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம், டெண்டர்கள் போன்ற அரசு நிர்வாக விவகாரங்களில் சசிகலா தலையிட்டதாகவும் தெரிகிறது. நிலை கை மீறி போகும் நிலையிலேயே ஓய்வு பெற்ற நம்பிக்கைக்குரிய முன்னாள் அதிகாரி ஒருவர் மூலம் உண்மை நிலவரங்களை ஜெயலலிதா தெரிந்து கொண்டதாகக் கூறப் படுகிறது. இதன் பின்னணியிலேயே சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சசிகலாவின் நீக்கத்தை அடுத்து சசிகலா ஆதரவு அமைச்சர்கள் சிலரும் அதிரடியாக நீக்கப் படக் கூடும் என்று  தெரிகிறது. அதிரடிக்குப் பெயர் போன ஜெயலலிதா 29 ஆண்டு கால நெருங்கிய தோழி சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 30 அன்று அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளநிலையில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப் பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.

Comments  

 
+1 # farook 2011-12-19 22:43
அம்மா வைச்சங்காயை ஆப்பு ...... முதல் முறையாக உடன்பிறவ சகோதரார் வைகோ வைச்சங்காயை ஆப்பு, எலேக்ஷன் முடிந்தாதும் கூட்டணி கட்சி தே.மு.தி .க. , கம்னிஸ்ட. மமக வைச்சங்காய் ஆப்பு, உள்ளாட்சி தேர்தல் முடிந்தாதும் விலைவாசி எத்தி மக்களுக்கு வைச்சங்காய் ஆப்பு, இப்போ வைச்ச ஆப்பு சூப்பர் அப்பு
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # அறிவு 2011-12-21 01:34
இன்றைக்கு ஜெ-வை எல்லோரும் சசிகலாவையும் அவர்தன் கொள்ளை குடும்பத்தையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கியதை பாராட்டுகின்றனர்.

நல்ல காரியம் நடந்து இருப்பது என்னமோ உண்மை.

ஆனால்,

சசிகலாவும் அவர் கூட்டமும் இந்தளவிற்கு தமிழகத்தின் ஏன் இந்தியாவின் குறிப்பிடத்தக்க கொள்ளை குடும்பங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பதற்கு ஜெயலலிதா தான் காரணம் என்பதை சுட்ட ஏன் மறந்து விட்டனர் என்று தெரியவில்லை.

பல பேர் பல சந்தற்பங்களில் ஜெயலலிதாவிடம் எச்சரித்தும் அவர் என் தோழி என்று அணைத்து நின்று அத்துணை ஆட்டத்திற்கும் கண்ணை மூடி இருந்தது எத்துனை பெரிய மன்னிக்க முடியாத குற்றம்.

குற்றம் செய்தவர்கள் மட்டும் குற்றவாளிகளில்லை. குற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர் தான் முதன்மை குற்றவாளி.

இப்போதும் இவர் அவர்களின் பல ஆட்டத்தை கண்டு நீக்கவில்லை. தன் முதல்வர் பதவிக்கு ஆபத்து என்றவுடன் தான் நீக்கியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அப்பட்டமான சுயநலம்.

தமிழ் நாடே கொள்ளை போனாலும் பரவாயில்லை தன் பதவிக்கு மோசம் இல்லை என்றால் சரியா?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # பாபு 2011-12-21 01:58
சசிகலா ஜெயலலிதா பிரிவில் தமிழர்களிடையே ஓர் அளப்பறியார்வம் (க்யூரியாசிட்டி ) இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும்?

ஜெயலலிதாவின் புத்திசாலித்தனமான முடிவு என்பதை விட, தமிழகத்திற்கு நன்மை பயக்கும் முடிவு என்று சொல்லலாம், இறை நாட்டமிருந்தால்.

ஏனென்றால் இன்றைக்கு நில அபகரிப்பு என்று திமுக பிரமுகர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், 91-96ல் தம்மிடம் மாட்டிக்கொண்டவர்களிடமெல்லாம் சொத்து அபகரிப்பு செய்தவர்கள் இந்த மன்னார்குடி மாஃபியா தான்.

ஆனால், ஒரு கட்சி குப்பைத்தொட்டியில் போடுவதை மற்ற பிரதான கட்சி எடுத்து தலையில் வைத்துக் கொள்வது தமிழக அரசியலின் 'பண்பாடு'. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று!
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # இளமாறன் 2011-12-21 10:28
குஜராத் முதல்வர் மோடியின் தலையீட்டால்தான் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்தார் என தினமலர் போன்ற இந்துத்துவ நாளேடுகள் செய்தி பரப்பிக் கொண்டுள்ளன. சசிகலா பெங்களூர் சென்றிருந்த அந்த மூன்று நாட்களில் மோடி தனது அடிபொடிகளைக் கொண்டு ஜெயலலிதாவுக்கு உண்மையை உணர வைத்தாராம்.

அது உண்மையாக இருந்தால் ஜெயலலிதாவின் இமேஜிற்கு இது பலத்த சரிவு!

30 வருடங்களாக உடன்பிறவா சகோதரியாக இருந்த ஒருவரைப் பற்றி வெளிமாநிலத்திலிருந்து ஒருவர் வந்து சொல்லித்தான் ஜெ தெரிந்து கொண்டார் என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

இது நாள் வரை ஜெயலலிதா மன்னார்குடி மாஃபியாவினால் ஆட்டுவிக்கப் படுகிறார் என்றார்கள். 'சோ'-தான் அவருக்கு ஆலோசகர் என்றார்கள். இப்போது மோடி அவரை வழி நடத்துகிறார் என்கிறார்கள். அவருக்கு சொந்தமாக முடிவெடுக்கவே தெரியாதா?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # இளமாறி 2011-12-28 17:24
இப்போது மோடி அவரை வழியும் நடத்தவில்லை ... தலையும் யிடலை...MR இளமாறன்.. அவர் இங்கே நடப்பவைகளை தெரிஞ்சதால சொல்லியிருக்கிறார். அவளவுதான்.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: