தானே புயலின் சீற்றம் இங்கும் இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப் பட்ட அ இ அ தி மு க வின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது.
தாரை தப்பட்டை முழங்க பொய்க்கால் குதிரை, கரகாட்டம், புலியாட்டம் என பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் அ இ அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பொதுக் குழுவில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.
கழக அவைத் தலைவர் மது சூதனன் தலைமையில் கூடிய செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் ௨௫ முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலரும் பேசிய பின்னர் ஜெயலலிதா பேச வந்தார். அப்போது, வாஜ்பாயைப் பிரதமராக்கி இந்தியாவைப் பாஜக முதன் முறையாக ஆளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறிய ஜெயலலிதா, எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்வதற்கான காலம் கனிந்து கொண்டு இருப்பதாகவும் அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் அதிமுக நிச்சயம் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த வெற்றிக்கு இப்போதே உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஜெயலலிதா அதைச் செவ்வனே செய்து முடித்து விட்டால் தமிழகத்தின் உரிமைகளுக்காக, நீர் வள ஆதாரங்களுக்காக கையேந்திப் போராடுகிற நிலை நமக்கு வராது என்று திமுகவுக்கு ஒரு குட்டும் வைத்தார். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தும் முல்லைப் பெரியாறு பிரச்னையில் ஒரு தீர்வு எட்டப் பட வில்லை என்பதை நாசூக்காக உணர்த்திய ஜெயலலிதா அடுத்து சசிகலாவின் மேட்டருக்கு வந்தார்.
அரசியல்வாதிகளிலும் கட்சிக் காரர்களிலும் பலவிதம் உண்டு. குற்றம் புரிந்ததற்காக கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்கள் தாம் செய்த தவறுக்கான தண்டனைதான் இது; இனி நமக்கு அரசியல் வேண்டாம் என்று, இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக ஒதுங்கி விடுவர். இன்னும் சிலர் வேறு கட்சியில் இணைந்து தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடருவார். அதில் தவறேதுமில்லை. ஆனால் இன்னும் சிலர் தவறு செய்து துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப் பட்ட பின்னரும் கட்சியில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு நாங்கள் மீண்டும் உள்ளே வந்து விடுவோம். எங்களைப் பகைத்துக் கொண்டால் நாங்கள் மீண்டும் உள்ளே வந்த பின் உங்களைப் பழி வாங்குவோம் என்று சொல்பவர்களும் உண்டு என சசிகலா தரப்பினரின் நிலை குறித்து பட்டும் படாமலும் தெரிவித்தார்.
அதோடு நிறுத்தாத ஜெயலலிதா அவ்வாறு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் அவரின் பேச்சை நம்பி செயல்படுபவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று சசிகலா தரப்பு அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார். கட்சிக் காரர்களுக்கு ஜெயலலிதா விடுத்த எச்சரிக்கையின் மூலம் சசிகலா குடும்பத்தினரின் பேக் டூ போயஸ் கார்டன் திட்டத்துக்கு ஜெயலலிதா ஆப்பு வைத்துள்ளார் என்றாலும் ஜெயலலிதாவின் பேச்சையும் கட்சிக் காரர்கள் நம்பத் தயாராக இல்லை.
எது எப்படியாயினும் இன்றோ நாளையோ என்றாகி விட்ட நிலையில் பதவியில் இருக்கும் வரை போட்ட பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புவோம் என்று ஒரு சில அமைச்சர்கள் உச்சகட்ட வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் கூறப் படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
சேர்ந்திடக் கண்டேனே!
செவ்வானம் கடலினிலே - வந்து
மூழ்கிடக் கண்டேனே!'
சொத்துக் குவிப்பு வழக்கினிலே - பிடி இறுகிடக் கண்டேனே
சென்னையுடன் மன்னைவந்து சேர்ந்திடக் கண்டேனே!
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed