தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன் என அவரது உறவினர்கள் 14 பேர் அ இ அ தி மு க வில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர். சசிகலா உள்ளிட்ட 14 பேர் நீக்கப் பட்டதன் பின்னணி குறித்து இந்நேரத்திலும் செய்தி வெளியானது.
ஜெயலலிதா - சசிகலா மோதல் குறித்து பல்வேறு தகவல்களும் ஊடகங்கள் வழியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. துக்ளக் இதழின் ஆசிரியரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகருமான சோ ராமசாமி கடந்த வாரம் இருமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியதாகவும் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய அரசியலில் ஈடுபட வேண்டுமானால் சசிகலா தரப்பினரை கூண்டோடு அப்புறப் படுத்த வேண்டும் என்று சோ கூறிய ஆலோசனையின் அடிப்படையிலேயே சசிகலா உள்ளிட்ட 14 பேர் நீக்கப் பட்டதாகவும் கூறப் படுகிறது.
இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனிக்க குஜராத்தில் இருந்து நர்ஸ் ஒருவரைக் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அனுப்பி வைத்ததாகவும் சசிகலா தரப்பினருக்கும் நர்சுக்கும் ஏற்பட்ட மோதலை நர்ஸ் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றதோடு போயஸ் கார்டன் விவகாரங்களையும் நரேந்திர மோடி காதில் போட்டதாகவும் விவரங்களைக் கேட்டுக் கொண்ட மோடி ஜெயலலிதாவுடன் பேசி போயஸ் கார்டன் சசிகலாவின் கட்டுப்பாட்டிலுள்ள நிலவரத்தைத் தெரிவித்த பின்னரே சசிகலா உள்ளிட்டோர் நீக்கப் பட்டு அதிமுக காப்பாற்றப் பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் ஜெயலலிதா - சசிகலா மோதல் விவகாரம் ஒரு நாடகம் என்றும் சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை அடையும் நிலையில் இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகமே அன்றி வேறில்லை. 29 வருடமாக ஜெயலலிதாவின் அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்த சசிகலாவை ஜெயலலிதாவால் பகைத்துக் கொள்ள முடியாது என்றும் 1996 ஆம் ஆண்டு நீக்கப் பட்டு பின்னர் சேர்த்துக் கொள்ளப் பட்டது போன்றே மீண்டும் சசிகலா போயஸ் கார்டனுக்குத் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்கிறது ஒரு தரப்பு.
இந்தச் செய்திகள் மூலம் நியாயமான சில கேள்விகள் நமக்குள்ளும் எழுகின்றன. இது நாள் வரை சசிகலா தரப்பு செய்த தவறுகள் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் போனதா? அல்லது தெரிந்தும் தெரியாது மாதிரி இருந்தாரா? தன்னுடன் கூட இருக்கும் ஒரு கூட்டம் செய்யும் தவறுகள் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஆண்டு கணக்கில் திட்டமிட்டு மறைக்கப் பட்டிருந்தது என்று கூறுவது கேப்பையில் நெய் வடிகிறது என்று கூறுவது போலத் தான் உள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே 160 தொகுதிகளுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதுவும் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் சசிகலா தரப்பினரால் வெளியிடப் பட்டது என்றே சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அவ்வாறே சசிகலா தரப்பினரின் தவறால் நடைபெற்றது என்றாலும் இதற்காக சசிகலா தரப்பு மீது ஜெயலலிதா அப்போது எடுத்த நடவடிக்கை என்ன?
ஆக, சசிகலா குடும்பத்தினரைக் கூண்டோடு ஜெயலலிதா வெளியேற்றியதன் பின்னணியில் சசிகலா தரப்பின் தவறுகள் சோ அல்லது மோடியால் ஜெயலலிதா கவனத்துக் கொண்டு வரப்பட்டதே உண்மையான காரணமாக இருக்குமெனில், சசிகலா தரப்பினர் செய்த தவறுகளுக்கும் அவர்கள் அந்த அளவுக்கு வளர்ந்ததற்கும் ஜெயலலிதாவும் ஒரு முக்கியக் காரணம் என்பதையும் ஜெயலலிதா மறந்து விட வேண்டாம்.
தற்போது, சசிகலா தரப்பு வெளியேற்றத்தால் மற்றொரு தரப்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்து இருப்பதாகவும் கூறப் படுகிறது. சசிகலா குடும்பத்தினரைக் கூண்டோடு வெளியேற்றிய ஜெயலலிதாவின் செயல்பாடு உண்மையானது எனில், இனியாவது ஜெயலலிதா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். இல்லையேல், பேயை விரட்டி விட்டு பிசாசிடம் சிக்கிக் கொண்ட கதையாக ஆகிவிடும். அவ்வாறு ஆனால், ஜெயலிதாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே அது சனியாகத்தான் இருக்கும்!
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed