இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் அரசியல் விமர்சனம் சமரசத்திற்கு முயல்கிறதா சசிகலா & கோ!

சமரசத்திற்கு முயல்கிறதா சசிகலா & கோ!

அவரொரு முடிவெடுத்தால், மற்றவர்கள் மூக்கின்மேல் விரலை வைப்பார்கள் என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவைக் குறிப்பிடலாம்.  அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை நிரந்தர முடிவுகளும் இல்லை.

அடையாளமே இல்லாதவர்களுக்கும் அரியணை வழங்கி அழகுப் பார்ப்பதிலும் சரி, காலில் விழுபவர்களேயானாலும் காலை வாரியடிப்பதிலும் சரி, இன்னிக்கு மந்திரி, நாளைக்கு எந்திரி என்று இஷ்டத்துக்குப் பந்தாடுவதானாலும் சரி, பலவருட 'உடன்பிறவா நட்பை' வேரோடுப் பிடுங்கி எறிவதிலும் சரி, ஜெயலலிதாவின் முடிவுகளுக்குத் தயவோ, தாட்சண்யமோ, பயமோ, பாகுபாடோ, ஏரணமோ, சூரணமோ எதுவுமேயில்லை. எல்லா முடிவுகளுக்குப் பின்னாலும் ஓர் ஆச்சரியம் மட்டும் கட்டாயம் இருக்கும்.

கண்ணின் மணியாய் கிடந்த சின்னம்மா குடும்பத்தைக் கட்சியை விட்டு அப்புறப்படுத்தியதும் அப்படி ஒரு முடிவுதான். அதனால்தான் பார்க்கும் இடங்களிலெல்லாம் அதைப் பற்றியே பேச்சாக இருக்கிறது.

அடுத்தடுத்து ஆட்சிப்பணி அதிகாரிகளை மாற்றுவதிலும், தனது அமைச்சர்களை 'நாளை என்ன நடக்குமோ' என்கிற பயத்தின்மீது அமரவைத்து, அதற்காக ஆளுநரையே 'சென்னையிலேயே இருங்க' என்று கேட்டுக்கொள்வதையும் பார்த்தால், சசிகலாவைச் சதிகலா என்று தீர்மானித்தமைக்காக ஜெயலலிதா கிஞ்சிற்றும் சஞ்சலமற்றிருப்பதாகவே தெரிகிறது.

ஆனால் இத்தனை வருடமும் பாதாதிகேசமும், கேசாதிபாதமும் ஜெயலலிதாவை நன்கறிந்த சசிகலா தரப்பு ஏன் மெளனமாகவே இருக்கிறது என்பது ஜெயலலிதாவின் முடிவுகளைக் காட்டிலும் ஆச்சரியம். ஒருவர் முடிவெடுப்பதில் ஆச்சரியப்படுத்துகிறார் என்றால் இந்த முன்னாள் உ.பி.சகோதரியோ முடிவெடுக்காமலேயே ஆச்சரியப்படுத்துகிறாரே என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்நேரம், வெளியேற்றப்பட்டவர்களின் கூடாரத்தில் என்ன நடக்கிறது என்று நோட்டம் விட்டபோது, அதிர்ச்சியிலிருந்து மீளாத மன்னார்குடி மக்கள் சமரசம் நாடி சகலரையும் சந்திக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

முதலில் 'மோடிவித்தை' யிது, உண்மையை போல பயமுறுத்தும் பொய்ச்செய்தி என்றே 'அவர்களும்' எண்ணியிருந்தார்கள். ஆனால் அம்முவின் தீவிரம் குறைந்தபாடில்லை என்பதால், அவருக்கு இப்போதைக்கு நெருக்கமான மோடியையே சமரசத்திற்கு நாடினார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.  மோடியோ வாய்மூடி வெளியேறும் வழியைக் காண்பித்தாராம்.

அதனால் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருந்தவர்களின் சுழலும் பம்பரக் கண்களில் பட்டவர் 'பம்பரக்கண்ணாலே' பாடியவரின் பெயருடையவர். சாட்சாத் ஆந்திராவின் வேந்தராக ஒருகாலத்தில் கோலோச்சிய அவரே தான். அவரை அணுகும் வழிகளை ஆராய்ந்த மிடாஸ் தரப்புக்கு, அவருடன் நெருக்கமான ஒரு மிடுக்கர் தொழிலதிபர் தெரிந்திருக்கிறார். அந்தத் தொழிலதிபர் மூலமாக நெருங்கவும், கணித்தபடியே பொறியில் விழுந்து காதுகொடுத்திருக்கிறார் ஆந்திரமுன்னாள்.

சரியான நேரம் வரட்டும் என்று சாந்தப்படுத்தியிருக்கும் அவரின் வார்த்தைகளை நம்பி, இப்போதைக்குச் சற்று மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதாம் முன்னாள் சின்னம்மா & கோ.

சசிகலாவின் அண்ணி இளவரசி இன்னமும் தோட்டத்தில் ராணிவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பதும் ஒரு ஆறுதல் அவர்களுக்கு - ஆலாய் பறக்கையிலும்!

- இளையகவி

Comments  

 
0 # ஆதவன் தீட்சண்யா 2011-12-28 08:22
சசிகலாவிடம் சாதிப்பாசம் காட்டி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகிவிடலாம் என்ற கனவில் மூன்றெழுத்தில் பெயர் கொண்ட பேராசிரியப் பெருந்தகை ஒருவர் மிதந்துகொண்டிருந்தாராமே, அவர் கதியும் அம்போதானா?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # முஸ்தபா 2011-12-29 00:45
பாதாதிகேசமும், கேசாதிபாதமும்
இதன் பொருள் என்ன?

Read more about சமரசத்திற்கு முயல்கிறதா சசிகலா & கோ! [1710] | அரசியல் விமர்சனம் | விமர்சனம் at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
0 # இளையகவி 2011-12-29 02:57
//பாதாதிகேசமும், கேசாதிபாதமும்
இதன் பொருள் என்ன?//


அடி முதல் நுனிவரை; உச்சி முதல் உள்ளங்கால்வரை என்பது அர்த்தம். முழுமையாக அறிந்தவர் என்பதற்காக இடக்கரடக்கலாகச் சொல்வது. இடக்கரடக்கல் என்றால் என்னவென்று கேட்க மாட்டீர்கள் தானே?! நன்றி ;-)
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: