அ இ அ தி மு க விலிருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப் பட்டப் பிறகு எப்போது என எதிர்பார்க்கப் பட்ட காவல்துறை ஆதிகாரிகள் மாற்றம் நேற்று இரவு நடந்தேறியது. சசிகலாவின் ஆதரவாளர் என கருதப் பட்ட உளவுப் பிரிவு ஐ.ஜி தாமரைக் கண்ணன், முன்னர் வகித்த சென்னை நகரின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கே மாற்றப் பட்டார்.
அதிகாரிகள் மாற்றம் சிறிய அளவில் நடந்துள்ள நிலையில் அடுத்து தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது. எந்த முன் அனுபவமும் இல்லாமல் சசிகலா குடும்பத்தினரின் சிபாரிசை மட்டுமே நம்பி அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட சிலரின் இலாகாக்கள் பறிக்கப் படும் என்று தெரிகிறது. தமிழக அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களில் சுமார் 10 பேர் வரை சசிகலா குடும்பத்தினருக்குக் கப்பம் கட்டியே பதவிக்கு வந்துள்ளதாகவும் கூறப் படுகிறது.
சசிகலாவின் சித்தப்பாவின் மருமகன் ராவணன் கை காட்டுபவர்களே அமைச்சர் பதவி வகிக்க முடியும் என்றும் அமைச்சர்கள் நியமனத்தில் ராவணன் கையே ஒங்கியிருந்ததாகவும் தெரிகிறது. பணம் கொழிக்கும் பொதுப் பணித் துறை மற்றும் போக்குவரத்து துறை பொறுப்புகளை வகிக்கும் இருவருமே ராவணனின் சிபாரிசால் நியமிக்கப் பட்டவர்கள் என்றும் அதன் காரணமாக இருவருக்குமே கல்தா கொடுக்கப் படலாம் என்றும் தெரிகிறது.
அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் அதிமுகவின் விசுவாசிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது. ராவணனின் கோபத்துக்கு உள்ளானதால் அமைச்சர் பதவி வழங்கப் படாமல் இருக்கும் முக்கியப் பிரமுகர் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
பிரதமர் இரு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளதையடுத்து முதல்வரும், ஆளுநர் ரோசைய்யாவும் பிசியாக இருப்பதால் பிரதமரின் சுற்றுப் பயணம் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|