இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் அரசியல் விமர்சனம் தமிழக அரசு தள்ளாடுகிறதா தடுமாறுகிறதா?

தமிழக அரசு தள்ளாடுகிறதா தடுமாறுகிறதா?

தமிழக அரசு தள்ளாடுகிறதா தடுமாறுகிறதா?ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ஆண்டுகூட முழுமையாடையாத நிலையில், இதுவரை 7 முறை அமைச்சரவையை மாற்றியுள்ளார். அமைச்சர்களை மாற்றுவது, அவர்களின்  துறைகளை மாற்றுவது என்பது நிர்வாக வசதிக்காக ஐந்தாண்டில் ஓரிரு முறை நடப்பதுதான்.

ஆனால் ஜெயலலிதா முதல்வராகும் போதெல்லாம் அமைச்சர்களைக் கொலு பொம்மைகள் போல அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பார் என்பதும் தமிழகம் அறிந்த ஒன்றுதான்.

ஜெயலலிதாவின் உயிர்த் தோழி, உடன்பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அதிமுகவில் இருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் அதிரடியாக நீக்கப் பட்டப் பிறகு சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பலரும் நீக்கப் படுவார்கள் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், யாரையும் நீக்காமல் 4 அமைச்சர்களை துறை மாற்றம் செய்தார் ஜெயலலிதா.

சசிகலா மற்றும் அவரின் உறவினர் ராவணனின் ஆதரவாளர்கள் எனக் கருதப் பட்ட அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேலுமணி ஆகியோர் துறை மாற்றம் செய்யப் பட்டதுடன் தலை தப்பியது என நிம்மதி அடைந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருவரும் அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டனர். வேலுமணி ஜெயலலிதாவிடம் நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கிய பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது சசிகலா தரப்பின் கோபப் பார்வையால் வேளாண்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப் பட்ட செங்கோட்டையனுக்கு  வருவாய்த் துறை ஒதுக்கப் பட்டது.

அது போன்றே நவம்பரில் அமைச்சர் பதவியை இழந்து மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப் பட்ட முசிறி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.சிவபதிக்கு மீண்டும் அமைச்சர் பதவியுடன் மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப் பட்டுள்ளது. அவருக்கு, முக்கிய துறையான பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.   இரு மாதங்களுக்கு முன்னர் நிர்வாகத் திறமையற்றவர் என அதிரடியாக நீக்கப் பட்ட சிவபதி இம்மாதம் தேர்வு எதுவும் எழுதி வெற்றி பெற்று விட்டாரோ என்று பொதுமக்களைப்போல் நாமும் வியப்படைந்துள்ளோம்.?

சிவபதி மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப் பட்டதற்கு வேறொரு காரணமும் கூறப் படுகிறது. திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பரஞ்சோதி அபார வெற்றி பெற்ற நிலையில் அமைச்சரவை பதவியைத் தக்க வைக்க சசிகலா தரப்பு பண பேரம் நடத்திய நிலையில் அத்தரப்பு கேட்டப் பணத்தைச் சிவபதியால் கொடுக்க முடியாததால்(?) அமைச்சர் பதவி பறிக்கப் பட்டதாகவும் பணம் கொடுத்த பரஞ்சோதி அமைசராக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.

தமிழக அரசு தள்ளாடுகிறதா தடுமாறுகிறதா?தமது அமைச்சர் பதவி பறிப்பின் பின்னணியை சிவபதி தலைமைக்குத் தெரியப் படுத்தியதாகவும் அதன் பின்னரே செய்த பாவத்துக்கு விமோசனம் செய்யும் வகையில் அமைச்சர் பதவி வழங்கப் பட்டதாகவும் தெரிகிறது. இச்செய்தி உண்மையாக இருப்பின் தற்போதுள்ள அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் பலரும் இது போன்றே பணப் பின்னணியில் அமைச்சராகி இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் சசிகலா தரப்பினரால் பதவி இழந்த உண்மை விசுவாசிகள் எத்தனை பேரோ என்ற ஐயத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது.

அமைச்சர்களை நியமிப்பதும் மாற்றுவதும் நீக்குவதும் முதலமைச்சரின் தனி உரிமை என்றுதான் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களை நியமிப்பதும் நீக்குவதும் முதலமைச்சரைவிட வலிமை படைத்த வேறொரு 'சக்தி' என்று  அறியும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அமைச்சர் பதவிகளும் அதிகாரிகளின் பணியிட மாறுதல்களும் பணத்தின் அடிப்படையில் என்றால்.. அரசு அதிகாரிகளின் பதவி உயர்வுகளிலும் ஐ ஏ எஸ் தகுதி உயர்விலும்கூட அந்தச் சக்தியின் கை இருந்தது என்றால்.... இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற வினாவும் எழுகின்றது. மேலும் அமைச்சரவை நியமனத்தில் ஜெயலலிதாவையும் மீறிய சக்தியை அவரால் கட்டுப் படுத்த முடிய வில்லை என்பதும் மிக ஆபத்தானது.

தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒருவர், தாம் மூன்று மாதங்களுக்கு முன் நியமித்த அமைச்சரை ஏன் மாற்றுகிறோம், மீண்டும் அவருக்கு ஏன் பதவி தருகிறோம் என்பதை உணராத ஒருவர் "இந்தியாவிலேயே அறிவாளியான முதலமைச்சர்" என பிரதமரால் புகழப்பட்டாராம்?. கொடுமை..!

அமைச்சரவை மாற்றங்களைப்போலவே அதிகாரிகள் மாற்றத்திலும் குழறுபடி.

சான்றுக்கு,  மன்னார் குடியில் இருந்தவாறே சென்னையில் தன் அதிகாரத்தை நிலை நாட்டிக் கொண்டு இருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு பிடிக்காத நிலையில் மாற்றப் பட்ட திருவாரூர் மாவட்டக் தமிழக அரசு தள்ளாடுகிறதா தடுமாறுகிறதா?காவல்துறைக் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜை மீண்டும் திருவாரூருக்கே கொண்டு வந்து திவாகரனுக்கு செக் வைத்துள்ளார் ஜெயலலிதா. அது போன்றே ராவணனின் ஆதிக்கம் மிகுந்த கோவையிலும் பணி  மாற்றம் செய்யப் பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் மீண்டும் அப்பதவிக்கே திரும்ப வந்துள்ளதும் தனிப் பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அதிகாரிகள் பந்தாடப் படுவதை நன்கு வெளிக் காட்டுகிறது.

நான்கு நாட்களுக்கு முன் தமிழகத்தின் கடைக்கோடி கன்னியாகுமரியிலிருந்து 233 நாட்கள் காலியாக இருந்த  சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் பதவிக்கு வந்த மதுமதி அப்பதவியில் முழுதாக மூன்று நாட்கள் இருக்கவில்லை. மாற்றப்பட்டுவிட்டார். தமிழகத் தலைநகர் மீண்டும் ஆட்சித்தலைவரில்லாமல் இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு நிலை மிகக்கேவலமாகப் போய்விட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறிகள் அன்றாட நிகழ்வாகி விட்டன. "நான் பதவிக்கு வந்ததும் திருடர்களும் கொள்ளையர்களும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர்" என்று ஜெயலலிதா சொன்னார். ஆந்திராவிலிருந்து கவர்னர் வந்தார். தினமும் அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்தே களைத்துப் போனார் ரோசைய்யா.  தம் பதவிக் காலத்தில் அதிக முறை பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் என்ற சாதனையை தமிழக ஆளுனர் ரோசையா எட்டினாலும் வியப்பில்லை..

இதுபோன்ற தடுமாற்றங்களும் தள்ளாட்டங்களும் 'சோ'வால் முன்மொழியப்பட்ட பிரதமர் கனவைக் கலைத்து விடுவன என்பதை ஜெயலலிதா உணர்ந்து கொள்ள வேண்டும். நிர்வாகத்  தடுமாற்றங்களையும்  தள்ளாட்டங்களையும் களைந்து திறமையான நல்லாட்சி வழங்க முயல வேண்டும் என்பதே அவரை நம்பி வாக்களித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Comments  

 
0 # தோடகன் 2012-01-30 11:21
என்ன ஆரம்பத்திலய இப்படி ஜமகுது
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: