சீனாவிலுள்ள ஷாங்காய் மாகாணத்தில் மிகப்பெரிய வர்த்தக மையமாக விளங்கும் பகுதி இவு. இப்பகுதியில் செயல்பட்டு வந்த யூரோ குளோபல் டிரேடிங் நிறுவனம் தங்களுக்கு நிலுவைத் தொகை அளிக்க வேண்டும் என்று கூறி, அந்நிறுவனத்தில் பணியாற்றிய இரு இந்தியர்களை அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள் சிலர் சமீபத்தில் பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்தனர்.
இவர்களை விடுவிப்பதற்காக அங்கு சென்ற இந்திய தூதரக அதிகாரி பாலசந்திரன், கடத்திய வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விசயம் நீதிமன்றம் வரை சென்றது. நிலுவைத் தொகை அளிக்க வேண்டிய உரிமையாளர் தலைமறைவாகிவிட்ட நிலையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட தீபக் ரஹேஜா, ஷியாம் சுந்தர் அகர்வால் ஆகிய இருவரையும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் முடிந்து நீதிமன்றத்தை விட்டு பாலசந்திரன் வெளியேவந்தபோது, ஆத்திரமடைந்த வர்த்தகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். நீரிழிவு நோயாளியான பாலசந்திரன், அடிதாங்க முடியாமல் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். உடனே அவரை அங்கிருந்த இந்தியர்கள் சிலர் மருத்துமவனைக்குக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் டிசம்பர் 31-ம் தேதி நிகழ்ந்ததாக இந்திய தூதர் ரிவா கங்குலி தாஸ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி தாங்கள் வெளியே சென்றால் தாக்குதலுக்குள்ளாவோம் என்று கூறிய இருஇந்தியர்களும் போலீஸ் காவலில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவர்களிருவரையும் கும்பல் தாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் சீன அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தீபக் ரஹேஜா, ஷியாம் சுந்தர் ஆகியோரை விடுவிப்பற்கான தூதரக அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கங்குலி தாஸ் தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்கு தலைநகர் டெல்லியிலுள்ள சீனத் தூதரக அதிகாரி ஜாங்யூவை திங்கள்கிழமை அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதேபோல், சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் சார்பிலும் பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் உள்ள அந்நாட்டின் அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியர்கள் தாக்கப்பட்டதும், அதை இந்திய அரசு அலுவல்பூர்வமாக கண்டித்ததும் நிச்சயம் பாராட்டுதற்குரியது என்றாலும் இந்தியாவின் அணுகுமுறை தமிழர்கள் விசயத்தில் முரண்பட்டதாக இருந்துவருவதாகக் கருதப்பட வேண்டியுள்ளது. தமிழக கடற்கரைகளில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் திடீரென வந்து கொலைவெறி தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தை, இந்தியா எத்தனை முறைகள் கண்டித்துள்ளது?
பாதிக்கப்பட்டது தூதரக அதிகாரியாக இருந்தாலும், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களாக இருந்தாலும் எல்லோருமே இந்தியர் என்ற அளவீட்டை மத்திய அரசு எடுக்கவேண்டும். இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு அருகே இந்தியர்களான தமிழர்களுக்கு மீன்பிடி உரிமை மறுப்பதையும், அதற்காக படகுகளை சேதப்படுத்தியும், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை தமிழர்கள் மறக்கவில்லை.
இதே கச்சத்தீவை பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்து, அப்போதும் வடஇந்திய மீனவர்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியிருந்தால் இந்தியாவின் எதிர்வினை வேறுமாதிரியாக இருந்திருக்கும். பாஜக உள்ளிட்ட அதன் கூட்டாளிகள் பாகிஸ்தான்மீது போர்தொடுக்கச் சொல்லி கூக்குரல் எழுப்பி ஒப்பாரி வைத்திருப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
- N. ஜமாலுத்தீன்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|