கருணா நிதி : படிக்க வேண்டிய வரலாறு!

1495

Karunanidhi : The Definitive Biography by Vasanthi ( India Today Former Tamil Editor)

ருணாநிதி.. இந்தப் பெயர் சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்கு வெறுப்பைத் தரலாம். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் அவர் ஒதுக்கப்பட முடியா நபர் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்வை எந்தப் பக்கசார்புமின்றி எழுதுவது கடினம். இந்தியா டுடே தமிழ் முன்னாள் ஆசிரியரும் கலைஞரை அதிகம் விமர்சித்தவருமான வாசந்தி நடு நிலையாக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

20 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள சுருக்கமான வரலாறு, தம் கம்பீர தந்தை ஒரு பண்ணையாரின் முன் தலை குனிந்து நின்றதைப் பார்த்து கலக குரல் எழுப்பிய சிறு வயது கருணாநிதியில் ஆரம்பித்து அவரின் திருமணம், அண்ணா பெரியார் மோதலில் கலைஞர் எடுத்த நிலைப்பாடு, அண்ணா துரைக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உதவியோடு ஆட்சிக்கு வந்தது, எம்.ஜி.ஆரை கருணா நிதிக்கு எதிராக திருப்ப இந்திரா செய்த வேலைகள் என முதல் பத்து அத்தியாயமும் சுழல்கிறது.

பிந்தைய இருபது அத்தியாயங்களும் வைகோ வெளியேற்றத்தில் ஆரம்பித்து இறப்பு வரை தொடர்கிறது. புலிகள் மற்றும் ஈழ தமிழரின் மீது கரிசனம் காட்டியதால் பதவி விலகிய கலைஞர் ஈழ விரோதியாகவும், அதனால் கலைஞரைப் பதவி விலக குரல் கொடுத்த ஜெயலலிதா ஈழத் தாயாகவும் கொண்டாடப்படுவதாகட்டும், ஊடகங்களிடம் சர்வதிகாரியாக நடந்து கொண்ட ஜெ-வை விட எப்போதும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் கலைஞர் அதிகமாக ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டது, கலைஞரே கருதுவதை போல் சூத்திரன் என்பதாலோ என பிராமணரான வாசந்தியே எழுதுவது நெகிழ்வு.

கோவையில் சிறுபான்மையினரின் அச்ச உணர்வைப் போக்கவே ஜெ ஆட்சி காலத்தில் போடப்பட்ட செக் போஸ்டுகள் நீக்கப்பட்டதும், கோவை கலவரத்திற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட நெருக்கடியால் அவர்களுக்கு உதவ கலைஞர் ஆர்வம் காட்டாததையும் வாசந்தி குறிப்பிடுகிறார். மேலும் முரசொலி மாறனால் பாஜகவுடன் கூட்டணி வைத்த கலைஞர் அதை ஏன் செய்தார் என்பதையும் அந்தக் கூட்டணி முறியும் வரை புழுக்கத்திலே கலைஞர் இருந்ததையும் குறிப்பிடும் புத்தகம் ஏனோ முள்ளிவாய்க்கால் சம்பவம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

அது போல் அழகிரி – மாறன் பிரதர்ஸ் மோதல், தினகரன் அலுவலகம் எரிப்பு, 2 ஜி வழக்கில் நிலை குலைந்த கலைஞர் என முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அழகுற பட்டியலிடுகிறார். சர்க்காரியா கமிஷன் அறிக்கை எவ்வாறு ஊதி பெரிதாக்கப்பட்டது என்பதையும் கலைஞர் – எம்.ஜி.ஆர் நட்பையும் ஆசிரியர் விளக்குகிறார். ஜெ-வின் வளர்ப்பு மகன் திருமணமும் சர்வதிகாரமும் ஜெ-வுக்கு வீழ்ச்சியைக் கொடுத்தது போல் குடும்ப பாசமே கலைஞரைக் கீழிறக்கியது என்பதையும் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

மொத்தத்தில் கலைஞரை பிடித்தாலும், வெறுத்தாலும் அவரைப் அறிய இப்புத்தகத்தைப் படிக்கலாம்

பொறியாளர் ஃபெரோஸ்கான்