இரு கடனாளிகளின் கதை Featured

Wednesday, 23 March 2016 21:54 Written by  இனியவன் Published in அரசியல் Read 1940 times

விஜய் மல்லையா "நல்ல காலங்களின் ராஜா" என்றும் " கிழக்கின் விளையாட்டு பிள்ளை" என்றும் அழைக்கப்படும் விஜய் மல்லையா டிசம்பர்18, 1955ல் பிறந்தார்.

விட்டல் மல்லையா எனும் தொழிலதிபருக்கு மகனாக பிறந்த விஜய் மல்லையா இந்தியாவின் மிகப் பெரும் எரிசாராய நிறுவனமான யுனைடைட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்பொழுது விஜய் மல்லையா மது, உரம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடும் யுனைடெட் ப்ரீவரிஸ் எனும் பெரு நிறுவனத்தின் தலைவராக உள்ளார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ள விஜய் மல்லையா ஸஹாரா ஃபோர்ஸ் பார்முலா ஒன் நிறுவனம் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிறுவனத்திலும் கூட்டு முதலாளியாக உள்ளார்.


விஜய் மல்லையா 2005ல் ஆரம்பித்த கிங் பிஷர் நிறுவனம் 2012ல் இழுத்து மூடப்பட்டது. யுனைடெட் நிறுவனத்தின் கிங் பிஷர் இந்திய பீர் மார்க்கெட்டில்
50 % மேல் விற்பனையாக கூடிய மது பானம் என்பதும் 52 நாடுகளில் விற்பனையாகும் மது பானம் என்பதும் கவனிக்கத்தக்கது.


1986ல் சமீரா தியாப்ஜி எனும் ஏர் இந்தியா விமான பணிப்பெண்ணை மணமுடித்த விஜய் மல்லையா சிறிது காலத்திலேயே விவாகரத்து செய்தார். சமீரா மூலம் பிறந்தவரே சித்தார்த் மல்லையா.1993ல் சிறுவயது தோழி ரேகாவை மணமுடித்த மல்லையாவுக்கு அத்திருமண பந்தத்தின் மூலம் லீயானா மற்றும் தன்யா எனும் இரு பெண்கள் பிறந்தனர்.


தொடக்க காலம் முதலே பல்வேறு சர்ச்சைகள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சொல்லப்படும் மல்லையா குழுமம் 2012க்கு பிறகு பலத்த அடி வாங்கியது. பிப்ரவரி 2015ல் யுனைடைட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட மல்லையா அதற்கு நட்ட ஈடாக 75 மில்லியன் டாலர்கள் பெற்றார். மல்லையாவுக்கு கொடுத்த
70 பில்லியன் ரூபாய் கடனை திரும்ப பெற பல்வேறு வங்கிகள் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில் வெளிநாடுகளில் மல்லையா சுதந்திரமாக சுற்றுவது கவனிக்கத்தக்கது.

 

ராஜீவ் சர்மா

(பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது)


பீஹார் தலைநகர் பாட்னாவில் 1968 ஜுலை 21ல் ஐந்து உடன்பிறப்புகளுடன் விவசாயி மகனாக பிறந்த ராஜீவ் சர்மா உள்ளூர் பள்ளிகூடத்திலும் கல்லூரியிலும் பயின்று பின் தில்லியில் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்தார்.


2004ல் ஒரு நாள் பணியில் இருந்த போது அலுவலக அலமாரியில் வைத்திருந்த 2
இலட்சம் ரூபாய் காணாமல் போனது குறித்து அவருடைய மேலாளர் சஞ்ஜீவ் குப்தா அவரிடம் விசாரிக்க பணம் காணாமல் போனதாக சொல்லப்படும் நாளில் தான் அலுவலகத்திலேயே இல்லை என்றும் தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றும் ராஜீவ் சர்மா கூறுகிறார்.


சர்மா அலுவலகத்தில் ஏற்கனவே கடனாக வாங்கிய 1 இலட்சத்தில் 2000 மட்டுமே கட்டியுள்ளதாகவும் மீதமுள்ள தொகையை கட்டுமாறு தான் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக சர்மா இப்பணத்தை கையாடல் செய்திருக்க கூடும் என்று குப்தா சொன்ன காரணத்தை ஏற்று கொண்ட காவல்துறை சர்மா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. பின்பு சர்மா ஜாமீன் தொகையை செலுத்தி ஜாமீனில் வெளி வந்தார்.


அச்சம்பவத்திற்கு பிறகு இரு முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த சர்மா ஒவ்வொரு வாய்தாவுக்கு சரியாக தன் சொந்த செலவில் ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். பத்து வருடங்களுக்கு பின் சர்மா கையாடல் செய்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லையெனினும் குப்தாவின் லாஜிக்கை ஏற்று இரண்டு இலட்சத்தை வட்டியுடன் ஒப்படைக்குமாறு சர்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


குப்தா குறித்து அவரின் மேலதிகாரிகளிடம் தாம் அளித்த புகாரின் பெயரிலேயே தம்மை குப்தா பழி வாங்குகிறார் என்று அந்த ஆதராங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தும் அதை ஏற்காமல் வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்துமாறும் ஒரு மாதம் சிறையில் இருக்குமாறும் சர்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய சக்தியின்றி, பொருளாதார பலமுமின்றி ஓய்ந்து போன சர்மா தற்பொழுது ஒரு வங்கியில் கடன் வாங்கி குப்தாவிடம் கொடுத்து விட்டு தற்பொழுது அக்கடனுக்கு வட்டி கட்டி கொண்டு உயிருக்கு பயந்து சற்று தொலைவில் வேறு ஒரு சிறிய நிறுவனத்தில் மேற்பார்வையாளராக
பணி புரிகிறார்.

(வளைகுடாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது)

 

Last modified on Wednesday, 23 March 2016 22:06
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.