தமிழிசை தலைமையில் தமிழக பாஜக காணாமல் போகும்! Featured

Thursday, 24 March 2016 18:25 Written by  இந்நேரம் Published in அரசியல் Read 2312 times

மிழக பா ஜ க தலைவர் தமிழிசை விகடனில் கொடுத்துள்ள பேட்டி, வயிற்றெரிச்சலில் "லாஜிக்" மறந்து உளறியதையும் தமிழிசையின் அரசியல் அறிவையும் காட்டியிருக்கிறது.

"பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?" என்று பேட்டியாளர் வினவுகிறார்.

அதற்கு, "வைகோ அவர்கள் நாங்கள் பஞ்சபாண்டவர்கள் என்று மக்கள் நலக் கூட்டணி மேடையில் வைத்துச் சொன்னதே எங்கள் கொள்கைகளுக்கான முதல் வெற்றி. இவர்களே இதற்கு முன்பெல்லாம் மகாபாரதத்தை, ராமாயணத்தை எவ்வளவு இழிவாக பேசியுள்ளார்கள் என்று மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்கள் இப்போது எங்கள் கொள்கையை நோக்கி ஓடிவருவதே அவர்களுக்கான முதல் சறுக்கல், எங்களுக்கான முதல் வெற்றி. இந்து மதத்திலிருந்து உதாரணம் காட்டவேண்டிய நிலைக்கு அவர்கள் போயுள்ளனர். பாஜகவின் அடிப்படைக் கொள்கை வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே திமுகவில் இருப்பவரில் 80 சதவீதம் பேர் இந்துக்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறும் அவசியம் ஏற்பட்டு உள்ளது. ராகுகாலம், நல்ல நேரம் என்றெல்லாம் பார்த்து பங்குனி உத்திரம், பூரண பவுர்ணமியில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுகிற அளவிற்கு திராவிடக் கட்சிகளும் கம்யூனிச மேதைகளும் போயிருப்பது எங்களுக்கான வெற்றியை உறுதி செய்திருக்கிற ஒன்றாகவே இதைப் பார்க்கிறோம்." என்று நீண்ட விளக்கம் தந்திருக்கிறார். (http://www.vikatan.com/news/politics/61120-tamilisai-soundarajan-interview.art)

வைகோ,"நாங்கள் பஞ்சபாண்டவர்கள்" என்று சொன்னது இவர்களின் கொள்கைகளுக்கான முதல் வெற்றியாம். அதாவது மகாபாரதம் இந்து மதத்திற்குரியதாம்; இந்து மதத்திலிருந்து உதாரணம் காட்டவேண்டிய நிலைக்கு வைகோ போயுள்ளாராம். தேர்தல் வெற்றியை விட இது சிறந்த வெற்றிதான் போலும்.

"இராமாயணமும் மகாபாரதமும் மதம் சார்ந்தவையல்ல; அவை இந்திய மரபு சார்ந்த இதிகாசங்கள்" என்று மாய்ந்து மாய்ந்து விளக்கம் சொல்லிய இந்துத்துவாக்களுக்கு தமிழிசை கொடுத்த மறுப்பு இது. எனவே இவை இரண்டையும் இனி இந்திய மரபு எனச்சொல்லாமல் இந்து மதம் சார்ந்தவை என்றே சொல்ல வேண்டும்.

மேலும் ராகுகாலம், எமகண்டம், நல்ல நேரம் போன்றவற்றைப் பார்த்து ம ந கூ கூட்டணி அறிவிப்பை வெளியிட்டிருப்பது இவர்களுக்கான வெற்றியை உறுதி செய்திருக்கிறதாம்.

அடடா என்னே அறிவு ; என்னே தெளிவு. புல்லரிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தலைமையைப் பெற தமிழக பா ஜ க என்ன தவம் செய்ததோ?

தேர்தல் வெற்றியை உறுதி செய்ய தேர்தல் அறிக்கை வேண்டாம்; மக்களறிந்த நல்ல வேட்பாளர்கள் வேண்டாம். பிரச்சாரம் வேண்டாம். இவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் - இவர்களைக் கண்டுகொள்ளாமல் - கூட்டணி அமைத்தவர்களது சில செயல்கள் மட்டும் போதுமாம் இவர்கள் வெற்றி பெற.

மக்களை மதரீதியாகப் பிளவு படுத்தி மதக்கலவரங்களை நடத்தி இரத்தம் ஓடச்செய்து பல மாநிலங்களில் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பாஜக - ஊடக பலத்தால் மோடியை முன்னிறுத்தி மத்தியிலும் ஆளும் பாஜக- அரசியல் அறிவோ, இந்துத்துவ அறிவோ இல்லாத தமிழிசை தலைமையில் தமிழ்நாட்டில் காணாமல் போகும் நாள் தொலைவில் இல்லை.

- பொன்மலர்

 

Last modified on Thursday, 24 March 2016 18:24
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.