அதிமுக ஆட்சியும் மக்கள் எதிர்பார்ப்பும்! Featured

Friday, 20 May 2016 03:16 Written by  இந்நேரம் Published in அரசியல் Read 2492 times

ஜினி காந்த் நடித்த ஒரு திரைப்படம் உட்பட சில படங்களில் ஒரு காட்சி வரும்.  அதில் கதாநாயகனும், வில்லனும் ஒரு நிலம் வாங்குவது சம்பந்தமாக ஏலப் போட்டியில் கலந்துகொள்வார்கள்.  ரேட் எகிறிக்கொண்டே போகும் இறுதியில் வில்லன் அந்த ஏலத்தில் வெற்றியடைவார்!

அடுத்த காட்சியில், வெளியில் வந்து கதா நாயகன் வில்லனை ஏளனம் செய்வார், “ அந்த நிலம் ஏற்கனவே எங்களுக்கு சொந்தமானதுதான், விலையே போகாமல் இருந்தது. இப்போது நீ அதிகமான விலை கொடுத்து வாங்கவேண்டும் என நாங்கள் போட்ட ப்ளானுக்கு வெற்றி, ஹா! ஹா! ஹா! வரட்டா?” என்பதுபோல ஒரு டயலாக் வேறு.

கிட்டத்தட்ட அந்தக் கதைதான் இப்போது நடந்துள்ளது.  திமுக சார்பாக டாஸ்மாக் வியாபாரத்தை மூடுவது, பல இலவசங்கள், சலுகைகள் என்று பெரிய பட்டியலை முன்வைத்து தேர்தல் அறிக்கை வெளிப்பட, கிளைமாக்ஸில் அதிமுக தலைவியும் அபரிமிதமான சலுகைகளை அறிவித்து, குறிப்பாக 100 யூனிட் வரை மின்சாரம் போன்றவை, தேர்தல் களத்தை திசை மாற்றினார்.  இப்படி இலவசங்கள் எதுவுமே தரமுடியாத நிலையில் இருந்த மற்ற ஏலதாரர்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை.

முடிவில் இரண்டு மாபெரும் போட்டியாளர்களுக்குள் ( தமிழகத்தை  குத்தகை கேட்பதில் ) பெரிய இழுபறியாக நடந்துமுடிந்த ஏலத்தில் ஆளும் கட்சி தமிழகக் குத்தகையை மறுபடியும் வென்றெடுத்திருக்கிறது!. 1984-க்குப் பின் இதுபோன்ற சாதனை நடந்ததில்லையாம்.

ஆனால் தமிழகத்தின் உண்மை நிலையோ, ஏராளமான கடன் தொகை, கஜானா காலி, லட்சக்கணக்கான கோடிகளை மின்துறை மட்டுமே இட்டு நிரப்பவேண்டியிருக்கிறதாம்.  இத்தகைய சூழலில் புதிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றச்சொல்லி அதிகமான சப்தங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும்.  110-ல் அறிவிப்புச்செய்யும் முதல்வரின் உத்தியை எதிர்க்க நூறு குரல்கள் ஒலிக்கும்!

ஆகவே இந்த ஐந்தாண்டுகளில் யார் மாட்டுவார் என்ற நிலையும் இருந்தது என்பதுதான் உண்மை.

ஆகவே, வரலாறு காணாத வெற்றி என்று இப்போது அதிமுக பெருமிதத்தில் இருந்தாலும், சந்திக்கவேண்டிய சவால்கள் சாதாரணமானதல்ல.  (எனினும் நாம் அவர்கள் இந்தச் சவாலில் இருந்து வெற்றிபெற்று சாதிக்க வேண்டுமென்று வாழ்த்துவோம் – நாட்டின் நலன் கருதி!).  இதற்கு உதவும் வகையில் இலஞ்ச ஊழலில் திளைத்து வந்ததாக கருதப்பட்ட சில முன்னாள் அமைச்சர்களின் தோல்வி இருக்கும்.

வராலாறு காணாத எதிர்க்கட்சியாக மாறிவிட்ட திமுக பொறுப்புகளில் இருந்து தப்பித்துவிட்டது என்பதை கணக்கிட்டால், ஒரு வகையில் இந்த ஏலப் போட்டியிலிருந்து வெற்றி பெற்றவர்கள் திமுகதான் என்பதும் புரியும்.  கட்சியும் இழந்த பெருமையில் இருந்து மீண்டெழுந்திருக்கிறது, பலம் பெற்றிருக்கிறது.  வாக்களித்த பொறுப்புகளில் இருந்தும் ஒரு ஐந்தாண்டு விடுதலை!.  இது சாதாரணமானதல்லவே!

அதிமுகவுக்கோ அல்லது தனக்கோ இந்தத் தேர்தல் தீர்ப்பு, முன்பு பெற்றிருந்த செல்வாக்கில் இருந்து, ஒரு பின்னடைவுதான் என்பதை உணரும் நிலையில் முதல்வர் இருக்கிறாரா என்பது நமக்குத் தெரியவில்லை.  சுற்றி நின்று தொடர்ந்து வெற்றிகீதம் மட்டுமே வாசித்துக்கொண்டு வாழ்பவர்கள் அவருக்குச் சொல்லவே மாட்டார்கள்.

மேலும், சொன்னாலும் எதனையும் உணரும் மனநிலையில் இருப்பவரல்லர் அதிமுக தலைவி என்பது அவரைப்பற்றி பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனம்.  அது பொய்யாகக் கடவது!.

பழய கெத்துடன் தமிழகத்தை இன்னும் ஐந்தாண்டுகள் ஆட்டுவித்துவிட்டு செல்வதற்கோ, அல்லது கொஞ்சமாவது கருணை காட்டி உளப்பூர்வமாகவே தமிழகத்தை நிமிர்த்திவிடுவதற்கோ அவருக்கு இருக்கும் வாய்ப்புகளும் அளப்பரியது.  அதனை அவர் எவ்வாறு  நிறைவேற்றப் போகிறார் என்று தமிழக மக்களும், வரலாறும் உற்று நோக்கிக்கொண்டிருக்கும் அதே வேளை, நீதி தேவனின் பார்வைக்கும் தமிழக முதல்வர் கடமைப்பட்டிருக்கிறார்!.

மக்களின் தீர்ப்பில் உள்ள மயக்கங்கள் நீதி தேவனிடம் காணக் கிடைக்காது என்பதுதான் இந்திய இறையாண்மையின் எதிர்பார்ப்பு!

தனிமனிதரின் தலைமையின் மீதுள்ள மகிமை என்பதனைத் தாண்டி, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களில் இருந்து எவரேனும் ஒருவர் முதலிடத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் மெய்யான சனநாயக முறைமை மீண்டு வருவதற்கு இது ஒரு முன்னோட்டமாகவும் இருக்கலாம்.  யார் கண்டது!  நமக்குத் தெரியாத விசயங்கள் எத்தனையோ நடக்கலாம்.  நமக்கு நாமே நம் மனதை தயார்படுத்திக்கொண்டு வாழப் பழகுவோம்!.

பெருந்தலைவர் காமராசரைப் பற்றிச் சொல்லும்போது ஒரு கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.  ‘மக்களால் மதிக்கப்படும் பல தலைவர்களுக்கு மத்தியில், மக்களை மதித்து நடந்த ஒரே தலைவர்’ என்ற மெய்யான புகழாரம்தான் அது.

அதுபோல, தானென்ற அகந்தையில்லாமல், மக்களால் மக்களுக்காகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்ற உளப்பூர்வமான உணர்வுடன் நாட்டை ஆள்பவர் ஆட்சி செய்ய வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுக தலைமை அத்தகைய ஆட்சியினை மக்களுக்கு வழங்கட்டும் என எதிர்பார்ப்போம்!

-    என்.எஸ்.எம். சாகுல் ஹமீது, மதுக்கூர்

Comments   
+3 #1 PAARI K 2016-05-20 09:25
உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.