கல்யாணப் பரிசு! Featured

Thursday, 03 November 2016 16:08 Published in வாசகர்

அவளும் அவனும் அன்று திருமணம் செய்துகொண்டார்கள். கல்யாண விருந்தின் முடிவில் மணமகளின் தாய் தன் மகளை அழைத்து புதிய வங்கிக் கணக்குப் புத்தகம் ஒன்றைக் கொடுத்தாள் ".

அன்பு மகளே, இந்தா, உங்கள் இருவருக்கும் இது என் அன்புப்பரிசு. இந்தக் கணக்கு உங்கள் இருவரின் பெயரில் உள்ளது. முதலில் என் அன்பளிப்பாக ஆயிரம் ரூபாய். இது போல எப்போதெல்லாம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான, நினைவில் வைக்கும் தருணங்கள் அமைகின்றனவோ, அப்போதெல்லாம் இதில் பணம் போடுங்கள். எவ்வளவு மகிழ்ச்சியோ அதற்கேற்ப அவ்வளவு பணம் போட்டு வாருங்கள். அது எதற்காக என்றும் எழுதி வையுங்கள். உண்மையில் இது பின்னாளில் உதவியாக, வாழ்வில் ஓர் ஆவணமாக இருக்கும்".

மணமகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாள். இது உண்மையிலேயே நல்ல உத்தி. சேமிப்புக்கு சேமிப்பும் ஆச்சு. சந்தோஷத்துக்கு சந்தோஷமும் ஆச்சு.

சிறிது காலத்திலேயே அந்தக் கணக்கில் நிறைய பணம் சேர்ந்தது

07 பிப்ரவரி: மணாளனின் பிறந்தநாள் மகிழ்ச்சி 100 ரூபாய் சேர்ப்பு.

20 மார்ச். அவளுக்கு சம்பள உயர்வு. மகிழ்ச்சி. 200 ரூபாய் சேர்ப்பு.

15 ஏப்ரல் : விடுமுறைச் சுற்றுலா 300 ரூபாய் சேர்ப்பு.
01 ஜூன்: தாய்மை. 2000 ரூபாய் சேர்ப்பு. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

18 ஜூன்: அவனுக்கு மிகப்பெரிய பதவி உயர்வு. 1000 ரூபாய் சேர்ப்பு. மகிழ்ச்சி.

இப்படி இருந்துவந்த வாழ்க்கையில், காலம் செல்லச் செல்ல இருவரிடையேயும் மெல்ல கசப்புணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. இருவரும் தான்மை கொண்டு வாதிடவும் மோதிடவும் தொடங்க, இருவரிடையே இருந்த அன்பு விடைபெற்றுக்கொண்டது.
உலகத்திலேயே மிக மோசமான மனிதரை தான் திருமணம் செய்துகொண்டுவிட்டதாக இருவரும் பரஸ்பரம் நினைத்தார்கள். வெறுப்பின் அனலில் புழுவென மனம் துடித்தனர்.

அப்பெண் தன் தாயாரிடம் பேசினாள் "இனியும் என்னால் பொறுக்க முடியாது, பெரிய மடையன் அவன், நான் விலகிச் செல்லப் போகிறேன்".

நல்லது என்றார் தாயார் " உன் விருப்பம் போலச் செய்". தொடர்ந்து சொன்னார்: "பிரிந்து செல்வதாக முடிவெடுத்தால் அந்தச் 'சந்தோஷ' வங்கிக் கணக்கையும் அழித்து விடு, அது எதற்கு பிறகு அநாவசியமாய்?".

" அப்படியே செய்கிறேன்" என்றாள் மகள். மறுநாள் வங்கிக்குச் சென்று அந்த 'சந்தோஷ'க் கணக்கை நீக்கிவிடச் சொல்லிக் காத்திருந்தாள். காத்திருந்த சமயத்தில் அந்த 'சந்தோஷக் கணக்கை' எடுத்துப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க மனம் அந்த மகிழ்வின் கணங்களுக்குத் திரும்பியது. 'எப்படியெல்லாம் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறோம்'. பெருமூச்சு விட்டாள். 'சந்தோஷ'க் கணக்கை அழிக்க மனமின்றி வீடு திரும்பினாள்.

கேள்விப் பார்வையால் எதிர்கொண்ட கணவனிடம் "நீயே போய் கணக்கை நீக்கி விடு" என்று சொன்னாள்.

மறுநாள் கணவன் வங்கிக்குச் சென்றான். வங்கியில் காத்திருந்த போதில் அந்தக் கணக்கை எடுத்துப் பார்த்தான். அந்தக் கடந்த கால மகிழ்வின் கணங்களில் நுழைந்து பெருமூச்செறிந்தான். 'எத்தனை இனிமையாக வாழ்ந்திருக்கிறோம்'. ஒரு முடிவுக்கு வந்தான். காசாளரை அணுகி செய்ய வேண்டியதை முடித்து வீடு திரும்பினான்.

மனைவியிடம் சென்று அந்தக் கணக்குப் புத்தகத்தைக் கொடுத்தான். அவள் அதை எடுத்துப் பார்த்தாள். அதில் புதிதாக 5000ரூபாய் இடப்பட்டிருந்தது. அதன் குறிப்பாக "இன்றுதான் என் மனைவியை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்ட நாள்; அவள் தான் என்வாழ்வில் எத்தனை மகிழ்ச்சியைக் கொண்டு வந்தாள்' என்று எழுதியிருந்தான். அதைப் படித்து நிமிர்ந்தவளை அவன் ஆனந்தக் கண்ணீரால் வரவேற்றான். அவர்கள் அன்பால் ஆரத்தழுவிக் கொண்டனர். 'சந்தோஷ'க் கணக்கு குறிப்பேடு அதன் இடத்துக்குத் திரும்பியது.

கல்யாணம் ஒரு விளையாட்டல்ல, அது எளிதானதுமல்ல ஆனால் மிக அழகானது. வெவ்வேறு சூழலில் வெவ்வேறு பெற்றோரால் வளர்க்கப்பட்ட இருவர் கல்யாணத்தால் உடனேயே அனைத்திலும் உடன்பட்டுச் செல்வர் என்று கருதுவதற்கில்லை. நாம் சொல்லும் எல்லாவற்றையும் நம் துணை உடனேயே ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி இல்லை.

'உங்களின் துணையிடத்தில் உங்களுக்குப் பிடிக்காத குணம் இருப்பதற்காக வெறுத்து விடாதீர்கள். பிடித்த குணங்கள் நிச்சயம் இருக்கும். அதைக் கொண்டு சந்தோஷப்படுங்கள்' என்கிறது ஒரு நபிமொழி.

வாழ்க்கை என்பது நாம் விரும்புவதும் விரும்பாததும் கலந்ததே.

ஆங்கில மூலம்
தமிழில்: இ.ஹ

 

Last modified on Thursday, 03 November 2016 16:18
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.