ரோஹிங்யா முஸ்லிம் இனஅழிப்பில் மியான்மர் தீவிரம்! Featured

மியான்மர் என்ற பர்மாவில் ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நாட்டின் ராணுவமும், பௌத்த வன்முறை வெறியர்களும் கொன்று குவித்து வருகின்றனர்.

2017 ஆகஸ்ட் 25 தொடங்கி இரண்டே வாரங்களில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ண உணவின்றியும், நோய்வாய்ப்பட்டும், படுகாயமுற்றும் மரண விளிம்பில் துடிக்கின்றனர். ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குவியல் குவியலாக கிடக்கும் பிணங்களில் தங்கள் உறவினர் உள்ளனரா என ரோஹிங்யா முஸ்லிம்கள் தேடி அலைவதும், அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்படும் காட்சிகளும் ¢இதயத்தை நொறுங்கச் செய்கின்றன.

உலகிலேயே கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகும் சிறுபான்மை சமூகம் ரோஹிங்யா முஸ்லிம்கள் தான் என மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் கூறி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் அரசுகள் மவுனம் சாதிக்க - துருக்கி அதிபர் எர்துகான் குரல் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளின் முஸ்லிம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்களை திறக்கச் செய்யுமா? என அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் என்ற பர்மா அனைத்துமே ஒன்றாக இணைந்திருந்த நாடுகள்தான். 1947 ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15ல் இந்தியாவும் இரு நாடுகளாக பிரிந்து விடுதலை பெற்றன. பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் 1971 டிசம்பர் 16ல் வங்கதேசம் என்ற தனி சுதந்திர நாடாகியது. 1937ல் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசால் பிரிக்கப்பட்ட பர்மா, 1942&ல் ஜப்பானிடமும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனிடமும் அடிமைப்பட்டு 1948 ஜனவரி 4ல் சுதந்திரம் பெற்றது.

இன்று இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். 6 லட்சத்து 76 ஆயிரத்து 553 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், ஐந்தரை கோடி மக்கள் தொகையும் கொண்ட நாடு. பர்மீஸ் மொழி பேசப்படும் இந் நாட்டின் மதம் பௌத்தம். 1989ல் பர்மா மியான்மர் என்றும், அதன் தலைநகராக இருந்த ரங்கூன் யாங்கூன் என்றும் பெயர் மாற்றப்பட்டது. இன்று அதன் தலைநகரம் நைபிடாவ்.

மியான்மரோடு எல்லைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியா, சீனா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் வங்கதேசம். இதில் இந்தியாவில் இந்துக்கள் அதிகம். வங்கதேசம் முஸ்லிம் நாடு. மற்ற மூன்று நாடுகளிலும் பௌத்தர்கள் மிக அதிகம். 1824 - 1885 கால கட்டத்தில் மூன்று போர்கள் நடைபெற்று பர்மா பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1886ல் பர்மா, பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமானது.

1930ல் “நாம் பர்மியர்கள்’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. பர்மாவில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கிய தாசின்தான்டுன் தலைமையில் இந்த இயக்கம் செயல்பட்டது. ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளாக இருந்து பின்னர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆங்சான், ஊ நூ போன்றோர் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டனர். 1936ல் பர்மாவில் மாணவர் கிளர்ச்சி ஏற்பட்டு அது பெரும் போராட்டமாக மாறியது.
1937ல் பிரிட்டிஷ் அரசு பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாக்கியதோடு பா மா என்பவரை பிரதமராக்கியது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி தலைமையிலான அணியில் இருந்த ஜப்பான் 1942ல் பர்மாவை கைப்பற்றியது. ஆங்சான் த¬லைமையில் பர்மிய இயக்கங்கள் ஜப்பானுக்கு எதிராக போராடின. அவர்களுக்கு பிரிட்டன் அனைத்து வகையான உதவிகளையும் செய்தது.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நேசநாடுகள் வெற்றி பெற்றன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளளிட்ட நாடுகள் தோல்வி அடைந்தன. 1945 ஏப்ரலில் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி -சுட்டுக் கொல்லப்பட்டார். ஜெர்மனியின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். டிசம்பரில் ஜப்பான் பிரதமர் டோஜோ தூக்கிலிடப்பட்டார். பல நாடுகளை நேச நாடுகள் பங்கு போட்டுக் கொண்டன. பர்மா பிரிட்டன்வசமானது.

இந்தியாவை பிரிட்டன் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுவிக்க ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் நாடுகளோடு உடன்பாடு செய்து கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜியின் படையில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட எண்ணற்ற வீரர்கள் இருந்தனர். அந்தப் படை பர்மா வழியாக மணிப்பூர் வந்து பல பகுதிளை கைப்பற்றியது. ஜப்பான் சரணாகதி அடைந்த நிலையில் நோஜியின் படைக்கு எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை. அந்த படையில் இருந்த தமிழர்கள் அனைவரும் பர்மாவிலேயே தங்கி விட்டனர். அப்போது பர்மாவில் இந்திய வம்சா வழியினர் குறிப்பாக தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர்.

1947 ஜனவரியில் உருவாக்கப்பட்ட பர்மா புதிய அரசியலமைப்பு சட்டப்படி அதன் பிரதமராக ஊ நூ பொறுப்பேற்றார். ஆனால் எப்போதுமே உள்நாட்டு கலகங்கள¢ நடந்து கொண்டேயிருந்தன. இதில் ஆங்சான் உள்ளிட்ட பல தலைவர்கள், அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1948 ஜனவரி 4-&ல் பிரிட்டனிடமிருந்து பர்மா விடுதலை பெற்றது.

1962 மார்ச் 2&ல் பர்மாவின் ராணுவ தளபதி ஜெனரல் நீவின் புரட்சி நடத்த¤ ஆட்சியை கைப்பற்றினார். தொழில்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. தொழில்களை இழந்த இந்திய வம்சாவளியினர் அகதிகளாக இந்தியா வந்தனர்.1974ம் ஆணடு பர்மாவுக்கு புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. ராணுவ தளபதிகள் அரசியல் தலைவர்களாயினர். பெயரளவுக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் ராணுவ ஆட்சியே தொடர்ந்தது. ஜெனரல் நீவின் சர்வாதிகாரியாக விளங்கினார்.

ரோஹிங்யா முஸ்லிம்கள்:பர்மாவின் தென்மேற்கு பகுதியில் வங்காள விரிகுடா கடலின்¢மேற்குக் கரையில் அமைந்துள்ளது ராக்கைன் என்ற அரகான் மாநிலம். இதன் வடமேற்கு பகுதி வங்கதேசத்துடன் எல்லையைக் கொண்டுள்ளது. முஸ்லிம் சுல்தான்களின் ஆட்சியிலிருந்த இம் மாநிலத்தையும் சேர்த்து பர்மாவுக்கு விடுதலை அளித்த போது பிரிட்டிஷ் சூழ்ச்சியாளர்கள் பர்மாவின் 14 மாநிலங்களில் ஒன்றாக அளித்து விட்டனர். இதே பிரிட்டன்தான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை உருவாக்கி நிரந்தர அமைதியின்மையை ஏற்படுத்தியது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற கால கட்டத்திலேயே இங்கு இன, மத மோதல்கள் நடைபெற்றுள்ளன. 1974 ராணுவ ஆட்சியில் புதிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதை அடுத்து ரோஹிங்யா முஸ்லிம்கள் 10 ஆயிரம் பேரும், 1978ல் இரண்டு லட்சம் பேரும் அரகான் மாநிலத்திலிருந்து வங்கதேசத்துக்கு விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களில் திரளானோர் வங்கதேச அரசால் மீண்டும் பர்மாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடந்த 45 ஆண்டுகளில் ரோஹிங்ய முஸ்லிம்கள் வங்கதேசத்தில் 5 லட்சம் பேரும், பாகிஸ்தானில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரும், சவூதி அரேபியாவில் 2 லட்சம் பேரும், மலேசியாவில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேஷியா தாய்லாந்து நாடுகளில் சுமார் 1 லட்சம் பேரும், இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் அகதிகளாக வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அகதிகள் தினத்தையொட்டி ஐநா. சபை இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் 5 லட்சம் என்கிறது. 80000 ரோஹிங்யா முஸ்லிம் குழந்தைகள் பட்டினிச் சாவின் விளிம்பில் இருப்பதாகவும், 2,25,000 மக்கள் அவசர உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ஐ.நா அறிக்கை கூறுகிறது. 1982ல் ராணுவ சர்வாதிகரி நெவின் அரசு கொண்டு வந்த பர்மிய குடிமக்கள் சட்டப்படி 10 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். 2013&ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் 7,35,000 பேர் உள்ளனர் என அந் நாடு கூறுகிறது. ஆனால் ராக்கைன் மாகாணத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் சொந்த மண்ணில் எந்த உரிமையும் இன்றி அப்பாவிகளாக வாழ்வது இரக்கமுள்ளோருக்கு இதயத்தில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும்.

ரோஹிங்யா முஸ்லிம்களை வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என கூறி மியான்மர் அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது என்றால், பௌத்த துறவிகளும், பௌத்த பேரினவாதிகளும், ரோஹிங்யாக்களை மிருகங்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் வர்ணித்து அவர்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டி விடுகின்றனர்.2012&ம் ஆண்டு ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறினர். 2012 ஜுன் 10 அன்று மியான்மர் அரசு அவசர நிலையை பிரகடனம் செய்யும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியிருந்து. இந்த கலவரத்தை தொடர்ந்தே சர்வதேச பார்வை மியான்மர் மீது விழுந்தது.

-காயல் மகபூப்

Last modified on Tuesday, 12 September 2017 01:37