திரைத்துறையில் சாதிக்கும் தலித்துகளும் தடுமாறும் முஸ்லிம்களும்! Featured

Wednesday, 15 November 2017 22:36 Published in வாசகர்

தலித்கள் திரைத்துறையில் முத்திரை பதிக்கின்றனர், முஸ்லிம்களால் முடிவதில்லை என்று ஒரு கருத்து உள்ளது.

ஒரு தலித் உதவி இயக்குநராகவோ, நாயகனாகவோ வரும்போது அவர்களைக் குறித்த எந்த கேள்விகளோ சந்தேகமோ எழுவதில்லை.. அம்பேத்கரிஸ்டா, பெரியாரிஸ்டா, கம்யூனிஸ்டா என்பதெல்லாம் ஆராயப்படுவதில்லை.. வெளிப்படையாக தங்களை தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாதவரையில். காலப்போக்கில் உரையாடல்கள் மூலமாகவோ, படைப்புகள் மூலமாகவோ அடையாளத்தை வெளிப்படுத்தும்போதுதான் தலித் என்பது, எந்த சித்தாந்தத்தை சார்ந்தவர் என்பதெல்லாம் தெரிய வரும்..ஆனால் அதற்குள் அவர்கள் நிலைபெற்றுவிடுகிறார்கள்..இதையெல்லாம் தாண்டி அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது மிக மிக குறைவு..அவற்றிலும் தான் சார்ந்த சமூகத்தின் வலிகளை, வேதனைகளை வெளிப்படுத்துபவர்கள் அரிதினும் அரிது..இத்தனை வருட தமிழ் சினிமாவில் எத்தனை பேர் அப்படி இருப்பார்கள் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம்..!

சாதி சார்ந்து ஒருவர் வளரும்போது அவருக்கான பாதையை அவரது சாதியைச் சார்ந்தவர்களே அமைத்துக் கொடுத்துவிடுவார்கள்..

ஆனால் ஒரு முஸ்லிம் திரைத்துறையில் கால் பதிக்க முயலும்போது அவர் பெயரளவு முஸ்லீமா, நடைமுறையில் இஸ்லாத்தை பின்பற்றுபவரா என்பதெல்லாம் பார்க்கப்படுவதில்லை.. ஆயிரத்தெட்டு கேள்விகள் எழும்..அவை அத்தனையும் அவருக்கு தடையாக மாறும்..கட்டம் கட்டப்படுவார்கள்..பயணம் துவங்கும் முன்னரே சுபம் போட்டு முடித்து வைக்கப்படும்..

அரபியில் இருக்கும் பெயருடன் திரைத்துறையில் வலம் வருவது எவ்வளவு சிரமம் என்பதை ஒரு முஸ்லிம் இயக்குனர் பல மேடைகளில் நொந்து கொண்டிருக்கிறார்.. இரண்டு முஸ்லிம் இயக்குனர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பெரிய இயக்குனர் என்னய்யா பாய்ங்கள்லாம் ஒன்னு சேந்துட்டீங்களா என்று கேட்டாராம்..

அதையும் மீறி பயணிக்க வேண்டும் என்றால் மைய நீரோட்டம் எனும் மாய வலைக்குள் சிக்க வேண்டும்..
ராஜ்கபூர், ராஜ்கிரண்,மீரா கதிரவன்,தாமிரா என்று பெயரையும், அடையாளத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முஸ்லிம் பெயருடன் இருந்தாலுமே கொள்கை முற்றிலுமாக அற்றுப் போயிருக்கும்..நாசர், ஆர்யா, ஆரவ் என்று சமூகத்துடன் தொடர்பற்று இருக்க வேண்டும்..

அப்படி மிஞ்சுபவர்களில் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொள்ளும் ப்ரச்னைகள், தடைகள் பற்றி தங்கள் படைப்புகளில் பேசுபவர்கள் யாரும் இருப்பதில்லை என்பதில் வியப்பேதும் இல்லைதானே.!

தன்னுடைய சமுதாயம் படும் சிரமங்களை காட்சிப்படுத்த நினைத்தால் அதற்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது குதிரைக்கொம்பு..திரைத்துறையே தீண்டத்தகாதது என்று கருதிவரும் சமுதாயத்திற்குள் இருந்து தயாரிப்பாளர் கிடைப்பதும் பகல் கனவாகத்தான் இருக்கும்..

இவ்வளவு ஏன் எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலுமே கொள்கை சார்ந்த முஸ்லிம்கள் வெளிச்சம் பெறுவது மிகவும் சிரமம்..நான் இஸ்லாத்தை பின்பற்றுபவன் கிடையாது எனக் கூறுபவர்கள்தான் இங்கே வெளிச்சம் பெற முடியும் ..

தன்னை வெளிப்படையாக இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் என்றோ ஒரு இயக்கத்துடன் தொடர்புடையவன் என்றோ சொல்பவர்கள் இங்கே வேர்விடும் முன்னே வெட்டி எறியப்படுவார்கள்..

இருப்பு பற்றிய பயம் இல்லாதவர்கள் மட்டுமே இயங்க முடியும் என்பதுதான் நிதர்சனம்..

பார்வைகள் மாறும்போதுதான் பாதையில் உள்ள தடைகள் உடைக்கப்பட முடியும்..ஆனால் அதற்கு இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது ..

சமீபகாலங்களில் தொழில்நுட்ப கலைஞர்களாக பல முஸ்லிம்கள் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.கொள்கை புரிதல் கொண்ட சில இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் கூட உருவாகியுள்ளார்கள். முஸ்லிம்கள் குறித்த நல்ல சிந்தனையை ஏற்படுத்தும் கதைக்களங்களுடன் பல முஸ்லிம், முஸ்லிம் அல்லாத இயக்குனர்களும் இருக்கிறார்கள்..கீழ்வானில் தெரியும் ஒளிக்கீற்றுகளாக வெளிச்சம் பாய்ச்ச தயாராகி வருகிறார்கள்..நம்பிக்கையுடன் பார்த்திருப்போம்..

-அபுல் ஹசன்

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.