தஸ்வந்த் போன்றவர்கள் இதுவரை தண்டிக்கப்படாததற்கு யார் காரணம்? Featured

டந்த பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற ஏழு வயது சிறுமி தஷ்வந்த் என்ற இளைஞரால் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

ஆனால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவருடைய பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வந்த தஷ்வந்த் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் தாயை அவ்வப்போது கொலை செய்துவிடுவதாக தஷ்வந்த மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் டிசம்பர் 2ஆம் தேதி அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் தாயை கொன்று விட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தஷ்வந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தஷ்வந்துக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்ததே போதுமானது. ஆனால் அரசும், நீதிமன்றமும் தஷ்வந்த் ஜாமீனில் விடுதலையாக வழிவகுத்துவிட்டன என்பது பொதுமக்களின் அவேச குற்றச்சாட்டு.

தஷ்வந்த் ஒரு சைக்கோவாக இருக்கக் கூடும் என்பதும் ஒரு பார்வை .இப்போது தப்பியோடிய இன்னும் என்னவெல்லாம் செய்துவிடுவானோ என்ற அச்சம் பொதுமக்களிடையே உள்ளது. தஷ்வந்த் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்பதும் மேலும் தஷ்வந்த் போன்றவர்கள் விசயத்தில் நீதிமன்றம் எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய பொதுவான கோரிக்கை.

- அறிவழகன்