தந்தையும் மகனும் - புனிதப்பயணம்! Featured

Sunday, 17 December 2017 06:00 Published in வாசகர்

"ஏன் மக்காவுக்கு பிளேனில் போகவேண்டியதுதானே, ஈஸியகப் போகலாமே "

"கடலிலிருந்து நீர் மேலே செல்லும்போது, அது தன் உவர்ப்பைக் களைந்துவிட்டு மீண்டும் சுத்தமாகி விடுகிறது... "

"என்ன !!"

"கடலிலிருந்து நீர் ஆவியாகி மேகத்தினுள் செல்கிறது. அப்படி ஆவியாகும்போது அது சுத்தமாகி விடுகிறது. அதனால் தான் புனிதப் பயணம் செல்லும்போது கால்நடையாகச் செல்வது குதிரையில் செல்வதைவிடவும், குதிரையில் செல்வது காரில் செல்வதைவிடவும், காரில் செல்வது கப்பலில் செல்வதைவிடவும், கப்பலில் செல்வது விமானத்தில் செல்வதைவிடவும் சிறந்தது ... "

சினிமாக்கள் அதிகம் பார்க்கும் சினிமாப் பைத்தியம் இல்லையென்றாலும் சினிமாவே பார்க்காத யோக்கியனும் இல்லை. அவ்வப்போது எனது சுவையறிந்து நண்பர்கள் பரிந்துரைக்கும் சினிமாக்கள், எனக்குப் பிடிக்கும் என்று நானே கண்டுபிடித்து, கண்டபின் பிடித்து அல்லது பிடிகாமல்போன சினிமாக்கள் என்று அவ்வப்போது பார்ப்பது வழக்கம்.

மொழி, தேச எல்லைகள் கடந்து அறிவியல், வரலாறு, கலாச்சாரம் முதலியவற்றை பேசுபொருளாகக் கொண்ட சினிமாக்கள் அவ்வப்போது பார்ப்பது உண்டு. அவ்வகையில், பார்த்த உடன் மனதைப் புரட்டிப் போட்ட ஒரு சினிமாவைப் பற்றிய விஷயம் கீழே.

உங்களையும் புரட்டிப்போடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

ஒரு முறை பார்த்து அனுபவிக்க உகந்த ஒரு சிறந்த சினிமாவாக இருக்கும் என்று தோன்றியதால் எழுதுகிறேன். சினிமா விமரிசனத்திற்கும் நமக்கும் ஸ்நானப் பிராப்தி கூட இல்லை. அதனால் இது சினிமாவிமரிசனமும் அல்ல.

இந்த சினிமாவைப் பார்த்து விட்டு உங்கள் தந்தையை சில நாட்களேனும் உங்களால் நினைவிலிருந்து அகற்ற இயலாது. தந்தையை நினைத்து இரண்டு சொட்டு கண்ணீர் விடவைக்கும் மேஜிக் சினிமா இது.

இதில் வரும் தந்தையும் மகனுக்குமான உறவைச் சித்தரிக்கும் காட்சிகள், திரையில் நம்மை நமது தந்தையுடன் உலாவரச் செய்யும் காட்சிகளாக விரியும் அற்புதக் காட்சிகளாக நமக்குத்தெரியும்.

என்னையும் உங்களையும் போன்ற மிகச் சாதாரண மனிதர்களுக்கு வாய்க்கும், எப்பொழுதும் 'உர்ர்ரென்று ' இருப்பது போல நமக்குத் தோன்றும், பாசத்தையும் அன்பையும் வெளிக்காட்டாத ஒரு தந்தை, தனது விடலை மகனுடன் ஒரு நீண்ட
புனிதப் பயணம் செய்யும் நிகழ்வு தான் கதை.

எழுபதுகளில் நடப்பதாகப் படமாக்கப் பட்டுள்ள கதை. பல ஆண்டுகளுக்கு முன்னர் மொரோக்கோவிலிருந்து பிரான்சிற்குக் குடிபெயர்ந்த குடும்பத்தின் தலைவர் தான் ஒரு " முசுடுப் பெரியவரான " அந்த தந்தைக் கதாபாத்திரம். மகன் பிரான்சிலேயே வளர்ந்த விடலைப் பையன். கல்லூரி மாணவன். அரபி தெரியாது. இளைய தலைமுறைகளுக்கே உரிய உல்லாசம்.

திடீரென தாம் அடுத்த ஆண்டு உயிரோடு இருப்பது நிச்சயமில்லை அதனால் இம்முறை ஹஜ்ஜுக்குக் காரில் செல்வது என்று முடிவெடுகிறார். கார் ஓட்டத் தெரிந்த தனது மகனும் கூட வரவேண்டும் என்றும் குடும்பத்தில் அறிவிக்க, மறுத்து அடம் பிடிக்கும் மகன் பின்னர் வேண்டா வெறுப்பாக தந்தையுடன் பயணிக்கிறான்.

மொரோக்கோவின் அரபி பேசும் தந்தைக்கு - தாய்மொழி தெரிந்திருந்தும் - பிரெஞ்சுலேயே பதில் சொல்லிக் கொண்டுவரும் மகனினூடாக இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி துல்லியமாகப் பதிவு செய்யப்படுகிறது.

பிரான்சிலிருந்து சுமார் மூவாயிரம் மைல் தூரப்பயணம் தொடங்குகிறது. இத்தாலி, சுலேவேனியா, குரோஷியா, பல்கேரியா, துருக்கி, சிரியா, ஜோர்தான், நாடுகளைக் கடந்து சவூதி அரேபியவுக்குப் போகிறார்கள்.

இத்தேசங்கக்ளுக்கு நம்மையும் காரில் கூட்டிச் செல்லும் வழியில் அந்நாட்டின் நாட்டின் மண்வாசனையையும் மனிதர்களையும் காட்டுகிறது. பனிபெய்யும் மலைகளிலிருந்து - பாலைவனம் வரி இயற்கைக் காட்சிகள் அபாரம்.

வழியில் அவர்கள் படும் துன்பங்கள் அநேகம். ஒரு முறை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார்கள். இவ்வளவு துயரங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து தமது தந்தை எதற்காகப் புனிதப் பயணம் போகவேண்டும் என்ற கடுப்பில் மகன் கோபப்படுகிறான்.

பயணம் முழுவதும் தந்தை மகனின் உறவைக் கச்சிதமாக காட்டுகிறார்கள். இருவருக்குமிடையில் இருக்கும் பாசம், மரியாதை, பிணக்கம், செல்லம் எல்லாம் மாறி மாறி பயணம் முழுவதும் தொடர்கிறது.

இருவருக்குமிடையில் நடக்கும் உரையாடல் மிகக் குறைவு. மௌனமும் காட்சிகளும் பேசும் - நடக்காத உரையாடல்கள் - வசங்கள்தான் அதிகம்.

வழியில், உணவுக்குச் சிக்கல் வருகிறது. அந்நேரத்திலும் ஒரு பெண்ணுக்குத் தர்மம் செய்யும் தந்தையைப் பார்த்து கடும் கோபம் கொள்கிறான் மகன். அப்பெண்ணிடமிருந்து தந்தை கொடுத்த பணத்தை பிடுங்க முற்பட தந்தை கன்னத்தில் ஓங்கி அறைகிறார். ஒரு கட்டத்தில் இனி என்னால் தொடரமுடியாது என்கிறான்.

கடைசியில் மக்காவுக்குப் போய்ச் சேர்கிறார்கள் . அங்கு என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அனுபவம்.

மக்காவிலிருந்து திரும்பி வரும்போது தனது சட்டைப்பையைத் துழாவி கிடைக்கும் நாணயத்தை மகன் தருமம் செய்யும் - மகன் தந்தையாகி - வரும் காட்சியோடு நிறைவுறுகிறது.

இறுதிக் காட்சிகள் ஹஜ்ஜின் போது மக்காவில் எடுக்கப்பட்ட ஒரே சினிமா என்றும் ஒரு குறிப்பு சொல்கிறது.

இஸ்மாயில் ஃபரூக்கி இயக்கிய, Le Grand Voyage என்ற பிரஞ்சு மொழிப்படம், ஆங்கிலத் துணைத்தலைப்புகளுடன் வீடியோ

-அபூ பிலால்

Last modified on Sunday, 17 December 2017 10:00
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.