பேருந்து கட்டண குறைப்பு ஒரு கண்கட்டி வித்தை! Featured

பேருந்து கட்டண குறைப்பு ஒரு ஏமாற்று வேலையாகும். ஒட்டகத்தின் முதுகில் பல டன் எடையை ஏற்றி விட்டு ஒரு கிலோ எடையை குறைப்பதன் மூலம் சுமையை குறைத்துவிட்டது போல ஏமாற்றுவார்கள் என்று கூறுவார்கள். மக்களையும் ஒட்டகம் என நினைத்துக் கொண்டு சித்து வேலையில் ஈடுபடுகிறது அதிமுக அரசு.

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து அனைத்துப்பகுதி மக்களும் கொந்தளித்தனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டக்களம் கண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் போக்குவரத்து அமைச்சர் உட்பட சில அமைச்சர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என திமிர்வாதம் பேசினர். இந்த நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திங்களன்று தமிழகம் முழுவதும் மாபெரும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டப் பெருநெருப்பின் வெம்மை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைத்திருப்பது போல கண்கட்டி வித்தை காட்டுகிறது அதிமுக அரசு.

நகர மற்றும் மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுவதாகவும் அனைத்து நிலைகளிலும் ஒரு ரூபாய் குறைக்கப்படுவ தாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு பைசா குறைக்கப்பட்டுள்ளது. நூறு கிலோ மீட்டர் அளவுக்கு பயணம் செய்தால், ரூ. 20 தான் குறையும். பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தோடு ஒப்பிடும் போது இது ஒன்றுமே இல்லை.

ஆனால் போராட்டத்தின் வீரியத்தை குறைக்கப்போவதில்லை என்று எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன. பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வைப்பதே எதிர் கட்சிகளுக்கு கிடைக்கும் வெற்றியாக கருதப்படும்.

- அன்பழகன்