உத்தரக்கண்ட் காடுகளை சாம்பலாக்கும் டிம்பர் மாஃபியா! Featured

தொடர்ந்து 398 ஆவது முறையாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது, தேசிய அளவிலான ஒரு அவசரநிலை அலட்சியம் செய்யப்படுகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஆயுள் மிக வேகமாக குறைகிறது என்றே சொல்லலாம். கட்டிடம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சி சிறு சிறு கிராமங்களையும் நகரங்களையும் தன் கறைபடிந்த கரங்களால் சீண்டுவதே இதற்குக் காரணம்.

தேசிய அளவிலான ஒரு அவசரநிலை அலட்சியம் செய்யப்படுகிறது.சமீபத்திய நிகழ்வுடன் சேர்த்து தொடர்ச்சியாக 398 காட்டுத்தீ நிகழ்வுகள் பதிவாகியுள்ளது. கடந்த ஏழு நாட்களாக தாண்டவமாடிய காட்டுத்தீ அழிந்துபோன காடுகளையும், ஆயிரக்கணக்கான இறந்துபோன மரங்களையுமே விட்டுச் சென்றுள்ளது.

இந்த கோர நெருப்பின் உண்மையான காரணங்களை சுற்றுச் சூழல் ஆய்வாளர்களும் கண்காணிப்பாளர்களும் கண்டுபிடித்துச் சொல்லும் வரை, இயற்கையான காரணங்களால் இது நிகழ்ந்தது என்றே நம்பப்பட்டது. இந்த ஆய்வின் திடீர் திருப்பங்கள் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்: "மில்லியன் கணக்கில் விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிவகைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஊராரின் வன நிலப்பகுதியில் உள்ள மரங்கள் எரிந்து மடிவதையே
கட்டிடகாரர்கள் விரும்புகிறார்கள். மரங்கள் அழிந்தால் தான் அவர்கலால் நிலங்களை விக்கவும் பின்பு அதில் கட்டிடம் எழுப்பவும் முடியும். இதனால் ஊர் மக்களோ மரங்களை விற்பார்கள் - இது ஒரு சுழற்சியாக உருவெடுக்கிறது. இப்படியே மாநிலம் முழுவதும் எரிந்து நாசமாவதை நினைக்கும் போது மனம் உறைகிறது. இந்த மரக்கட்டைகளைக் கொண்டு சட்டவிரோதமான டிம்பர் ப்ளாக்
மார்கெட் வியாபாரிகள் ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதிப்பார்கள்."

மேலும், இந்த குற்றவாளிகளை யாரும் எதிர்த்துப் போராட முடிவதில்லை என்றார், "அவர்களோ பலமானவர்கள். அவர்கள் மரங்களை வாங்கும் காலமெல்லாம் உள்ளூர் மக்கள் அவர்களுக்கு விற்கவே செய்வார்கள். நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம். எங்களால் எவ்வளவு செய்ய முடியும்? இதுவரை 16 அழைப்புகள் வந்துள்ளன, இருந்தும் நாங்கள் இன்னும் பிஸியாக இருக்கிறோம். அவர்களெல்லாம் பணத்தை விழுங்குகின்றார்கள், அவ்வளவுதான்." என்றார்.

பறவைகள் நிபுணர், ராகுல் ஷர்மா கூறுகிறார், "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளான குமாஊன் மற்றும் கர்வால் காடுகள் கிராமத்தார்களால், பல ஆண்டுகளாக தீவைக்கப்படுகிறது. அவர்கள் புற்கள் வளர்வதர்க்காகவும், சட்டப் புறம்பாக மரங்களை விற்கவுமே இவ்வாறு நெருப்பு வைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காடுகள் பெரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது, மாநிலத்தின் எழில
பகுதிகளும் எரிகிறது. சாட்டல் பகுதியில் உள்ள எங்கள் பறவைகள் பாதுகாப்புக் குழு இரண்டு சிறுவர்கள் நெருப்பு வைப்பதைக் கண்டு அவர்களை விசாரித்தபோது அவர்கள் அவர்களின் தந்தை காடுகளுக்குத் தீ வைக்கும் படி கட்டளையிட்டதாக தெரிவித்தனர். நாங்கள் அந்த நெருப்பை உடனே அணைத்தோம் எனினும் அடுத்தநாள் மீண்டும் அந்த பகுதி தீவைக்கப்பட்டது."

"இராணுவத்தை வரவளைக்காதவரை இங்கே கடுமையான சூழலே நிலவும். நெருப்பை எதிர்துப் போராட பெரும் உதவித் தேவைப் படுகிறது ஆனால் ஒரு வாரமாக யாரும் அனுப்பப்படவில்லை." என்கிறார் பிம்தல் நகரத்தைச் சார்ந்த விக்டர்,

தி பயோனீர் நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ஏப்ரல் 29. வரை 398 இவ்வாறான நிகழ்வுகள் நடந்துள்ளது. 674.58 ஹெக்டேர்க்கும் மேலான காடுகள் இதனால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்திற்கு அருகில் வரை தீ பரவியதோடு ஒரு வாகனமும் எரிந்து சாம்பலானது.

கர்வால் பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளும் பெரிதும் சேதமடைந்துள்ளன. சிவில் வனப் பகுதிகளுடன் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலைமை மிகவும் அபாயகரமாகியுள்ளது. நாம் ஏன் இந்த அபாயகரமான நெருக்கடியை புறக்கணிக்கிறோம்?

- Ela Smetacek, Dailyo.in

தமிழில்: முஹம்மது ரமீம்.