570 கோடிகள் குறித்து பேசுவோமா? Featured

தேர்தல் சமயத்தில் பிடிபட்ட 570 கோடிகளும், அது பாரத வங்கியின் பணம்தானென்று வரும் செய்திகளும் சில எச்சரிக்கையை, வங்கியின் வாடிக்கையாளர் என்ற முறையிலும், நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், தேர்தல் காலத்து விதிமுறைகளின் கதிபற்றி கவலை கொண்டவன் என்ற முறையிலும், வங்கித் தணிக்கைத்துறையில் பணியாற்றிய அனுபவஸ்தன் என்ற முறையிலும் சில கருத்துக்களை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1.  ஒரு வங்கியின் நடைமுறைப் பிரச்சினை பற்றி இந்த நாட்டின் நிதி மந்திரி முன்வந்து ‘திட்டவட்டமான’ அறிவிப்பு செய்வது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோன்ற பழமொழி கேட்டு வாழும் மக்களிடம் வியப்பையும், சந்தேகத்தையும் எழுப்பாமல் விடாது!

2. சில அரசியல் வாதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் சொல்வதுபோல இந்நிகழ்வு சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு மெத்தனமாக இருந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

3. வங்கியின் தணிக்கையாளர்கள் ஆய்வுக்கு கீழ்கண்ட அடிப்படையான விசயங்கள் கட்டாயம் முன்வைக்கப்பட வேண்டும்.

3.1. வங்கிக்கு அந்தப் பணம் வந்த கணக்கு விவரங்கள் கணினியின் அடிப்படைத் தகவல்கள்/குறிப்புகளின் அடிப்படையில் சேகரித்து அதனை வங்கியின் அன்றாடக் கணக்குகளுடன் நேர் செய்து பார்க்க வேண்டும்.

3.2. Anti-Money Laundering விதிமுறைகள் ஏதெனும் பின்பற்றப்படாமல் விடுபட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.  இது யார் பெயரில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது, அவரின் கணக்குகளில் அவ்வாறு பண மழை அடிக்கடி பொழியுமா, வர்த்தகரின் கணக்கா என்றெல்லாம் தொடர் ஆய்வுகள் தேவைப்படும்.

3.3. பணம் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதானால் அதுபற்றிய தகவல் மின்னஞ்சல் அல்லது அதிகார பூர்வ தொடர்பு அஞ்சல் வழியில் அனுப்பப்பட்டதா?  உதாரணமாக வங்கியின் உள் தொடர்புத் தகவல்களில் அவை இருக்கிறதா?

3.4. பெருமளவு பணத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்ப அந்த வங்கியின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டனவா?

3.5. உரிய அதிகாரிகளின் கையொப்பங்கள், கீழ் மட்டத்திலிருந்து அத்தனை பேரிடமும் பெறப்பட்டிருக்கிறதா?  உதாரணமாக கேஸியர்கள் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள்.  ஆனாலும் எண்ணிக்கொடுப்பதும், எடுத்துக்கொடுப்பதும் அவர்கள்தானே? ஆகவே அவர்களின் கையெழுத்து குறிப்பிட்ட அடிப்படை படிவங்களில் இருந்திடவேண்டும்.  கணினி தகவல்களிலும் இடம்பெற வேண்டும் ( userid, timestamp, password etc. etc.)

3.6. இவ்வளவு பெரிய தொகைக்கான cash-flow படிவங்கள் நிரப்பப்பட்டு உரிய மேல்மட்டத்தின் பார்வைக்கு அது முன்பே அனுப்பப்பட்டுள்ளதா?

3.7. மற்றபடி, வங்கியின் கேமராக்களில் சம்பவங்களில் தொடர்புடைய பதிவுகள் காணக்கிடைக்கிறதா?

3.8. சுமார் 570 கோடி பணத்தை அனுப்ப மூன்று ட்ரக்குகள் அவசியமா? அதற்கான அனுமதி, செலவிணங்கள் யார் பொறுப்பு?.

3.9. அந்த வாகனங்கள் எப்போதும் அந்த வங்கியால் பயன்படுத்தப்படும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்பட்டதா? என்றெல்லாம் பார்க்க வேண்டும்.  இதில் சில வங்கியின் நடைமுறை தணிக்கைக்காகவும், சில குற்றம் நடந்திருக்கிறதா? அல்லது குற்றத்திற்கு வங்கி துனைபோயிருக்கிறதா என்று கண்டறிவதற்காகவும், நாட்டின் நலன் கருதி நிறைவேற்றப் படவேண்டியவை.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற தார்மிக அடிப்படை அரசியல் வாதிகளுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் பாரத வங்கியின் பெருமைக்கு நிச்சயம் இருக்கிறது!

- என்.எஸ்.எம். சாகுல் ஹமீது, மதுக்கூர்