பூவுலகின் நண்பர்களும் சென்னை புத்தகக் கண்காட்சியும் ! Featured

Sunday, 05 June 2016 13:57 Published in வாசகர்

2016 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் பூவுலகின் நண்பர்களின் நூல்களும் மற்றும் அவர்களின் கருத்தாக்கங்களும் காண்போரை வெகுவாக இழுக்கின்றது .

இந்தக் குழுக்கள் நடத்திய நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வுக் குரல்கள் பற்றி அவ்வப்போது நாம் வலைத்தளங்கள் மற்றும் சஞ்சிகைகளில் பார்த்தால் கூட நேரடியாக உரையாடும் போது பெற்ற தகவல்கள் சூழல் குறித்த விழிப்புணர்வை தெளிவாகத் தருகின்றது .

பூவுலகு சஞ்சிகையின் இணை ஆசிரியர் வழக்கறிஞர் சுந்தராஜன் அவர்கள் கூறுகையில் பூவுலகின் நண்பர்கள் 25 வருடத்திற்கு முன்பு நெடுஞ்செழியன் மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது . ஆனால் தற்போது கோ .சுந்தராஜன் என்பவரின் தலைமையின் கீழ் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு சென்னையை தலைமையாக கொண்டு
இயங்குகின்றது .

சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதும் , சூழல் பற்றி அரசாங்கத்திற்கு அதன் கடமையை வலியுறுத்துவதையும் தங்கள் நோக்கமாக களத்தில் இருந்து பணி செய்கின்றார்கள். தனியார்துறை அரசாங்கத்தின் உதவியோடு நடைமுறை படுத்தும் சூழியல் மாசு மற்றும் உணவு வணிகத்தில் இருக்கும் ஏகாதிபத்திய சிந்தனையையும் , வெறியையும் நூல்கள் வாயிலாக விளக்கு கின்றார்கள் .

மீள் உருவாக்கம் செய்யப்பட இந்த 5 வருடங்களில் 100க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது .பூவுலகு என்ற சூழியல் சஞ்சிகை மற்றும் மின் மினி என்ற மாணவர்களுக்கான சுற்று சூழல் மாத இதழ் நடத்தி வருகின்றார்கள் .

மருத்துவர் சிவராமன் மற்றும் இந்தியா டுடேயில் பணியாற்றிய கவிதா சிவராமன் இந்த மாதந்திர சஞ்சிகையின் நிர்வாக பொறுப்பில்இ ருக்கின்றார்கள் . மரபணு மாற்றம் செய்யப்பட கத்திரிக்காய் குறித்து பலரும் எதிர்த்து போராடும் தருணத்தில் தமிழகத்தின் பூவுலகின் நண்பர்களுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு இருக்கின்றது .

இதன் காரணமாக மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்தார் என்பது மகிழ்ச்சியான செய்தி ஆகும். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இறுதி வரை இந்த குழுமத்திற்கு மிக ஒத்துழைப்பு தந்தார் . உணவுத்திருவிழா நடத்துவதும் அதில் இயற்கை உணவுமுறைகள் பற்றிய சிறப்புகளையும், நவீன உணவு முறைகளின் சூழ்ச்சி அரசியலை எடுத்து சொல்கின்றார்கள்.

தமிழகத்தில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு சூழியல் குறித்தான சிந்தனை வெகுவாக மக்களை கவர்ந்து வருவது ஆரோக்கியமான விடயங்கள் ஆகும் . சூழியல் பாதுகாப்பு என்ற சிறந்த நோக்கத்தை எடுத்துக்கொண்டு அற்புதமான ஆய்வு , களப் போராட்டம் , நூலாக்கம் என்று பயணிக்கின்றார்கள் .

சாதி மத பேதமின்றி அனைத்து சிந்தனை யாளர்கள் உடனும் பயணிக்கும் இவர்கள் சொல்வது சூழியல் சீர்கேட்டால் பாதிப்பது அனைவருமே ஆவர் .அதனால் அவற்றை எதிர்கொள்வது நமது கடமை என்கிறார்கள் . சூழியல் குறித்த விழிப்புணர்வு பணிகளில் போர் செய்யும் பேனாக்கள் என்ற சர்வதேச எழுத்தாளர்கள் கூட்டமைப்பு உடன் சேர்ந்து பயணிக்கவும் தயார் நிலையில் இருப்பது மகிழ்வைத் தருகின்றது .

- அபூஷேக் முஹம்மத்

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.