காவல்துறையின் காவலித்தனமும் தாக்கப்பட்ட சூழியல் ஆர்வலரும் ! Featured

Saturday, 16 July 2016 14:46 Published in வாசகர்

சேலத்தில், மக்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்கப்படாமல் முள்வாடி பகுதியில் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்த சூழலியல் செயற்பாட்டாளர் மற்றும் சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ் மற்றும் கார்த்திக், முத்து ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 8) கைது செய்தார்கள் சேலம் டவுன் நிலைய காவலர்கள்.கார்த்திக் மற்றும் முத்துவிற்கு நேற்று (வியாழக்கிழமை, ஜூலை 14) பிணை வழங்கப்பட்டுவிட்டது. பியூஷிற்கு பிணை வழங்க காவலர்கள் கடுமையான ஆட்சேபம் தெரிவித்ததால், பிணை மறுக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பியூஷை அவரது மனைவி மோனிகாவும், செயற்பாட்டாளர் ஈஸ்வரனும், தருமபுரி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலாவும் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களிடம் தம்மை சிறைக் காவலர்கள் கடுமையாக தாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் பியூஷ். பின்பு, தம்மை சந்தித்த வழக்கறிஞர் மாயனிடமும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் பியூஷிடம் சிறைக் காவலர்கள் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறார்கள்...?

இந்த கேள்விக்கான பதில் உண்மையில் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. ஆம். வினுப்பிரியா தற்கொலை சமயத்தில், ' காவல் துறையினரின் பொறுப்பின்மையால்தான் அவர் தன்னை மாய்த்துக் கொண்டார். காவல் துறை இவ்வழக்கை முறையாக கையாண்டிருந்தால் நிச்சயம் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்' என்று கடுமையாக போராடினார்.

இதன் பின்னர் காவல் துறை கண்காணிப்பாளர் வினுப்பிரியாவின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார். முறையாக வழக்கை நடத்துவதாகவும் உறுதி அளித்தார். இதனை மனதில் வைத்துக் கொண்டே, தன்னுடைய சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த காவல் துறை, சிறைக் காவலர்கள் மூலம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

நம்மிடம் பேசிய வழக்கறிஞர் மாயன், “பியூஷை சிறையில் முப்பது காவலர்கள் தாக்கி இருக்கிறார்கள். ஒரு செயற்பாட்டாளருக்கே சிறையில் இந்த நிலை என்றால், சிறையில் உள்ள மற்றவர்களின் நிலையை நினைத்து பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது.

காவலர்கள் பியஷைக் கொல்ல திட்டமிட்டு இருக்கிறார்களோ என அஞ்சுகிறோம்" என்றார்.

பியூஷின் மனைவி மோனிகா, “உண்மையாக மக்களுக்காக உழைப்பவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறதா காவல் துறை. காவல்துறை அவரை சிறையிலே ஏதாவது செய்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உடனடியாக அரசு இதில் தலையிட வேண்டும்” என்றார் அழுதவாரே. இது தொடர்பாக சிறைத் துறையினரின் கருத்தைப் பெற தொடர்பு கொண்டோம். பல முறை முயற்சி செய்தும், அவர்கள் நம் அழைப்பை எடுக்கவில்லை.

 

Last modified on Monday, 02 January 2017 18:57
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.